காரிமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை ஆசிரியர் திட்டியதால் விபரீதம்


காரிமங்கலம் அருகே 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை ஆசிரியர் திட்டியதால் விபரீதம்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 10:36 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே, 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். ஆசிரியர் திட்டியதால் மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளி ஊராட்சி சிக்கதிம்மனஅள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன். கூலித்தொழிலாளி. இவருக்கு சத்தியவாணிமுத்து என்ற மனைவியும், கார்த்திக் (வயது 15) என்ற மகனும், கார்த்திகா (13) மற்றும் கலை ஆகிய 2 மகள்களும் இருந்தனர்.

இதில் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3 நாட்களாக பள்ளியில் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் வகுப்பில் திருத்தி முடிக்கப்பட்ட தேர்வு தாள்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது கார்த்திக் 3 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்ததாக தெரிகிறது. இதனால் கார்த்திக்கின் வகுப்பு ஆசிரியர்,கார்த்திக்கை திட்டி, பெற்றோரை அழைத்து வந்து மாற்று சான்றிதழை வாங்கி செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட மாணவன் கார்த்திக் மாலை வீட்டிற்கு சென்றதும் ஆசிரியை கூறியதை தன் தாயிடம் கூறியுள்ளான்.

பின்னர் இரவு வீட்டில் கார்த்திக் தனி அறையிலும், தாய் மற்றும் கார்த்திகா, கலை ஆகிய 3 பேரும் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கியுள்ளனர். நேற்று காலை திறந்து கிடந்த கார்த்திக் அறைக்கு சென்ற தங்கை கார்த்திகா அண்ணன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கூச்சலிட்டார். அதை கேட்டு ஓடிவந்த தாய், மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதார். இவர்களின் அழுகுரலை கேட்ட அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து கார்த்திக்கின் உடலை கீழே இறக்கினர்.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாணவனின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார். ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கெரகோடஅள்ளி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story