சேலம் மாநகரில், இந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1.35 லட்சம் பேர் மீது வழக்கு ரூ.1.64 கோடி அபராதம் வசூல்


சேலம் மாநகரில், இந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1.35 லட்சம் பேர் மீது வழக்கு ரூ.1.64 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 12:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் இந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1.35 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.64 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம், 


சேலம் மாநகரில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்காக போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து மற்றும் மாநகர போலீசார் ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டு ‘ஹெல்மெட்‘ அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதேபோல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிய படி ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், மதுகுடித்துவிட்டு ஓட்டுதல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்லுதல், அதிக பயணிகள் அல்லது பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1 லட்சத்து 35 ஆயிரத்து 373 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 64 லட்சத்து 70 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 35 ஆயிரத்து 818 இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும், பின்னால் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்து சென்ற 12 ஆயிரத்து 47 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

சேலம் மாநகரில் விபத்துகளை தவிர்க்க வாகன சோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

அதிக பாரம் ஏற்றி செல்லுதல், மதுஅருந்திவிட்டு ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிவேகமாக செல்லுதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறோம்.

இந்த ஆண்டில் 4,380 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தோம். இதில் 3,857 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு சாலை விதிமுறைகள் மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story