23 பேர் உயிரை காவு வாங்கிய: குரங்கணியில் 8 மாதங்களுக்கு பிறகு மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி - கட்டுப்பாடுகள் விதிப்பு


23 பேர் உயிரை காவு வாங்கிய: குரங்கணியில் 8 மாதங்களுக்கு பிறகு மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி - கட்டுப்பாடுகள் விதிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

23 பேரின் உயிரை காவு வாங்கிய குரங்கணி மலைப்பகுதியில் 8 மாத இடைவெளிக்கு பிறகு மலையேற்ற பயிற்சிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதி உள்ளது. இங்கிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டாப்ஸ்டேஷன் பகுதிக்கு மலையேற்ற பயிற்சி செல்ல அனுமதி வழங்கப் படுகிறது. அங்கு செல்ல வனத்துறை சார்பில் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் குரங்கணியில் இருந்து கொழுக்குமலை பகுதிக்கு மலையேற்ற பயிற்சி செல்வதற்கு அனுமதி கிடையாது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி இந்த மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் சிக்கி கொழுக்குமலைக்கு மலையேற்றம் சென்று விட்டு திரும்பி 23 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மலையேற்ற பயிற்சிக்கு ஜூன் மாதம் வரை தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நியமித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ரா விசாரணை நடத்தி அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தார். இதையடுத்து 8 மாத இடை வெளிக்கு பிறகு குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு மலையேற்ற பயிற்சிக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வனத்துறை சார்பில் இதுநாள் வரை விதிக் கப்பட்டு இருந்த தடை விலக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் நிருபர்களிடம் கூறியதாவது:-

வனத்துறை உயர் அதிகாரிகளிடமும், மாவட்ட கலெக்டரிடமும் நடத்திய ஆலோசனைகளை தொடர்ந்து குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷனுக்கு மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் மலையேற்றம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

தினமும் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மட்டுமே மலையேற்றம் செல்ல அனுமதி அளிக்கப்படும். குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் மட்டுமே மலையேற்றம் செல்ல வேண்டும்.

மலையேற்றம் செல்லும் பாதையில் சமைத்து சாப்பிட அனுமதி கிடையாது. மதுபானம், சிகரெட், தீப்பெட்டி, பாலித்தீன் பைகள் போன்றவை எடுத்துச் செல்லக்கூடாது. 10 வயதுக்கு குறைவானவர்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி கிடையாது.

மாவட்ட வன அலுவலரிடம் நேரிலோ அல்லது dfo_the-ni@ya-h-oo.co.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். டிரெக்கிங் கிளப்கள் தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் காலமாக கருதப்படும் பிப்ரவரி 15-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்படும்.

குரங்கணியில் இருந்து கொழுக்குமலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து செல்வதாக கூறி ஏராளமான இணையதளங்கள் செயல்படுகின்றன. இது தவறானது. இவற்றை தடை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story