முறையீட்டு கூட்டத்தில் பரபரப்பு: காட்டு யானைகளை பிடிக்கக்கோரி கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்


முறையீட்டு கூட்டத்தில் பரபரப்பு: காட்டு யானைகளை பிடிக்கக்கோரி கலெக்டரை முற்றுகையிட்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முறையீட்டு கூட்டத்தில், காட்டு யானைகளை பிடிக்கக்கோரி கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுவாக அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டம் தொடங்கியதும், கோவையில் அட்டகாசம் செய்து வரும் 2 காட்டு யானைகளை பிடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது காட்டு யானைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் அஜய் தேசாயின் ஆலோசனையை கேட்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் காட்டு யானைகளை பிடிக்கும் பணி தொய்வடைந்துள்ளது. எனவே உடனடியாக காட்டு யானைகளை பிடிக்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, காட்டு யானைகளை பிடிக்க அதிகாரபூர்வமாக உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரிகளுடன், விவசாயிகள் சந்தித்து பேசும் வகையில் வருகிற 2-ந் தேதி (நாளை) கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு உங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் கூறினார். இதையடுத்து விவசாயிகள் தங்களது முற்றுகையை கைவிட்டனர். பின்னர் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

கந்தசாமி (கட்சி சார்பற்ற விவசாய சங்கம்):- கோவையில் உயர் மின்கோபுரங்கள் விவசாய நிலங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பில் இருந்து 15 சதவீத இழப்பீடு தொகை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே சந்தை மதிப்புக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி, அரசே நிலத்தை கையகப்படுத்தி கொள்ளலாம்.

காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறு வனங்கள் மூலம் இழப்பீடு தொகை பெறலாம் என்று வாட்ஸ் அப் மூலம் தவறான தகவல் பரப்பப் பட்டு வருகிறது. இதன் மூலம் வனவிலங்குகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை சிலர் திசைதிருப்ப முயற்சிக்கின்றனர். எனவே தவறான தகவல்களை சமூக வலைத் தளங்கள் மூலம் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரன் (விவசாயி, கிணத்துக்கடவு):- தென்னை மரங்கள், கொய்யா உள்ளிட்டவற்றில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் இயற்கை மருந்தை பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். இந்த இயற்கை மருந்து ஒரு லிட்டர் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது. எனவே இந்த மருந்தை வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்.

முத்து (விவசாயி, நவக்கரை):- எஸ்.எஸ்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு முதல் வரதையங்கார்பாளையம் நால்ரோடு வரையுள்ள நீர்வழிப்பாதையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகின்றன. நவக்கரையில் உள்ள கண்ணியம்மன் குட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்):- பரம்பிக்குளம் அணையில் இருந்து தூணக்கடவு அணைக்கு தண்ணீர் விடப்படும் மதகுகள் பழுதாகி வருகிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு காலதாமதம் இன்றி மின் இணைப்பு வழங்க வேண்டும். தென்னையில் நடப்பாண்டில் மகசூல் குறைந்து உள்ளதால் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற வட்டியில்லா கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Next Story