பெங்களூருவில் வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது ரூ.31 லட்சம் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மீட்பு


பெங்களூருவில் வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடன் கைது ரூ.31 லட்சம் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:15 AM IST (Updated: 1 Dec 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வீடுகளில் கைவரிசை காட்டிய பிரபல திருடனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்கநகை, வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், வீடுகளில் திருடி வந்த பிரபல திருடனை கைது செய்திருந்தார்கள். அவரிடம் இருந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டு இருந்தன. அந்த நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

அவற்றை போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பார்வையிட்டார். பின்னர் அவர், அந்த நகைகளை உரிமையாளர்களிடம் வழங்கினார். முன்னதாக போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு கோரங்களாவை சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதில், ஈடுபடும் கும்பலை பிடிக்க கோரமங்களா போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீடுகளில் கைவரிசை காட்டியதாக பிரபல திருடனான பீனியா 1-வது ஸ்டேஜில் வசித்து வரும் காந்தராஜ் என்ற காந்தா(வயது 42) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை அவர் நோட்டமிடுவார். பின்னர் இரவு நேரங்களில் அந்த விடுகளின் கதவை உடைத்து நகைகள், பொருட்களை திருடுவதை காந்தராஜ் தொழிலாக வைத்திருந்தார்.

அவ்வாறு திருடும் நகைகளை விற்று கிடைக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். ஏற்கனவே வீடுகளில் திருடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு காந்தராஜ் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு மீண்டும் வீடுகளில் காந்தராஜ் திருடி வந்துள்ளார். ஏற்கனவே அவர் மீதான திருட்டு வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு ஒரு வீட்டில் திருடும் போது பொதுமக்களிடம் காந்தராஜ் சிக்கி கொண்டார். அவர்களிடம் இருந்து தப்பித்து அவர் சாக்கடை கால்வாய்க்குள் குதித்து பதுங்கிக்கொண்டார். அதன்பிறகு, ஒவ்வொரு வீட்டிலும் திருடிவிட்டு, அந்த நகைகளை ஒரு துணியில் சுற்றி சாக்கடை கால்வாயில் மறைத்து வைத்துவிடுவார். பின்னர் அந்த நகைகளை எடுத்து விற்பனை செய்வதை காந்தராஜ் வாடிக்கையாக வைத்திருந்தார். இவ்வாறு சாக்கடை கால்வாய்க்குள் திருட்டு நகைகளை மறைத்து வைப்பதால், போலீசாரிடம் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று காந்தராஜ் கருதி வந்துள்ளார்.

கைதான காந்தராஜ் கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய ஒரு கிலோ 19 கிராம் தங்க நகைகள், 900 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.31 லட்சம் ஆகும். காந்தராஜ் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் கோரமங்களா, பேகூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 13 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான காந்தராஜ் மீது கோரமங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.

பேட்டியின் போது சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர்(கிழக்கு) சீமந்த்குமார் சிங், துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Next Story