கொடைக்கானல் மலைப்பாதையில்: ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி
கொடைக்கானல் மலைப்பாதையில் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
கொடைக்கானல்,
‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. அத்துடன் வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதம் அடைந்தன. மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனிடையே புயலால் பாதிக்கப்பட்ட கல்லறைமேடு, அப்சர்வேட்டரி, புதுக்காடு, ஏரிச்சாலை, செயிண்ட் மேரீஸ் சாலை போன்ற பகுதிகளில் நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் நகர் பகுதியில் மட்டும் 128 மரங்கள் விழுந்தன. இவை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதுதவிர 264 தெருவிளக்குகள் சேதம் அடைந்தன. இதில் 146 விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. நகரில் 27 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. நகரில் உள்ள சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க ரூ.29 கோடி நிதி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ‘கஜா’ புயல் காரணமாக 7 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் புயல் நிவாரணத்துக்காக ரூ.250 கோடி கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு, பழனி செல்லும் மலைப்பாதைகளில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் விழுந்துள்ளன. விழுந்த மரங்களை அகற்றப்படுவது மட்டுமின்றி அங்கு புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது உதயகுமார் எம்.பி., கலெக்டர் டி.ஜி.வினய், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ், நகர செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான ஸ்ரீதர், முன்னாள் நகரசபை தலைவர் எட்வர்டு, அவைத்தலைவர் ஜான்தாமஸ், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கட்ராமன், ஆவின் பாரூக், ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, ஆர்.டி.ஓ. சிவக்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story