ரவுடி கொலை வழக்கில்: 5 பேருக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு


ரவுடி கொலை வழக்கில்: 5 பேருக்கு ஆயுள் தண்டனை - தஞ்சை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2018 11:00 PM GMT (Updated: 30 Nov 2018 9:19 PM GMT)

தஞ்சையில், ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர், 

தஞ்சை கரந்தை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மலையரசன்(வயது 26) பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை, கொலை மிரட்டல், வழிப்பறி, அடி தடி மற்றும் பல்வேறு வழக்குகள் இருந்தது. தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், மேற்கு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் 1 வழக்கும் இருந்தது. தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் மலையரசன் பெயர் இடம் பெற்று இருந்தது.

கடந்த 25-12-2014 அன்று காலை மலையரசன் கியாஸ் இணைப்புக்கு வங்கிக்கணக்கு மற்றும் ஆதார் அட்டை நகல் கொடுப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பினார். கரந்தையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். மோட்டார் சைக்கிள் கரந்தை அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், மலையரசன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் 2 பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் மலையரசனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதைப்பார்த்ததும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

மர்ம நபர்கள் வெட்டியதில் மலையரசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கரந்தை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மீன் குத்தகை எடுத்தது மற்றும் முன்விரோதம் காரணமாக மலையரசன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் அப்பு என்கிற சதீஷ்குமார் (27), சக்கரசாமந்தம் வடக்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வெற்றி(30), திருவையாறு கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த நெடுஞ்செழியன் மகன் கார்த்திக்(28), ரவீந்திரன் மகன் ராஜ்குமார்(31), சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்த செல்வகுமார்(41), கரந்தை ஆறுமுகம் மகன் வெங்கடேஷ்(30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சதீஷ்குமார் கடந்த 18.11.2015-ல் மலையரசன் ஆட்களால் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 5 பேர் மீதான மலையரசன் கொலை வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தனது தீர்ப்பில் வெற்றி, கார்த்திக், ராஜ்குமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.60 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்தார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் உத்தரவிட்டார்.

செல்வகுமார், வெங்கடேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

Next Story