மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் குழந்தையை அடித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 30 Nov 2018 9:48 PM GMT (Updated: 30 Nov 2018 9:48 PM GMT)

மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் 1 வயது மகளை அடித்து கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

வசாய்,

பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு, மன்வெல்பாடா பகுதியை சேர்ந்தவர் துஷார்(வயது38). இவரது மனைவி சவுஜானி.

இவர்களுக்கு ஹர்சிதா என்ற ஒரு வயது மகள் இருந்தாள். துஷார் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி சண்டைபோட்டு வந்தார்.

இதனால் விரக்தி அடைந்த சவுஜானி கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அருகில் உள்ள தாயின் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்தநிலையில் செப்டம்பர் 29-ந்தேதி துஷார் மனைவியை சமாதானம் செய்து அழைத்து செல்ல மாமியார் வீட்டிற்கு சென்றார். ஆனால் சவுஜானி குடும்பம் நடத்த அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் குழந்தை ஹர்சிதாவின் கால்களை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை ஹர்சிதா பரிதாபமாக உயிர் இழந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் துஷாரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை வசாய் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு குழந்தையை அடித்து கொலை செய்த துஷாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறியது.

Next Story