இடஒதுக்கீடு தேவைப்படும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகலாம் சட்டசபையில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு


இடஒதுக்கீடு தேவைப்படும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகலாம் சட்டசபையில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

இடஒதுக்கீடு தேவைப்படும் முஸ்லிம்கள் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகலாம் என சட்டசபையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் முஸ்லிம்கள் தங்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இடஒதுக்கீடு பெற விரும்பும் முஸ்லிம்கள் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகலாம் என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

சாதிய அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே சாதிய முறை இல்லை. இந்துவாக இருந்து முஸ்லிமான பலர் மதம் மாறிய பிறகும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களாக உள்ளனர். அதுபோன்ற முஸ்லிம்களில் 52 வகையான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

முஸ்லிம்களுக்குள் இன்னும் அதிக சாதிகள் உள்ளது என கருதுபவர்கள், இடஒதுக்கீடு தேவைப்படுபவர்கள் அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்த மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அணுகலாம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அதுகுறித்த பரிந்துரைகளை மாநில அரசிடம் சமர்பிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story