கடம்பூரில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்


கடம்பூரில் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Dec 2018 3:40 AM IST (Updated: 1 Dec 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடையை அகற்றக்கோரி கடம்பூரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் பஸ் நிலையத்தின் அருகே மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை முன்பு மாதர் சங்க வட்டார செயலாளர் தாயலம்மாள் தலைமையில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் மதுக்கடை முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பங்களாப்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், கடம்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘கடம்பூர் பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் இந்த மதுக்கடையால் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், மாணவ–மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடையை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘விரைவில் அகற்றப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story