பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்ததால் தந்தை மீது போலீசில் புகார் கொடுத்த மாணவி
பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்றதை கண்டித்ததால் தந்தை மீது மாணவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருப்பூர்,
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டுவர கூடாது என உத்தரவு உள்ளது. திருப்பூரில் அரசு பள்ளியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி ஒருவர் பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தார். வீட்டில் செல்போனை காணாததால் அவருடைய தந்தை விரைந்து வந்து பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த தனது மகளை நிறுத்தி, செல்போனை கொடுக்கும்படி கேட்டார். முதலில் எடுக்கவில்லை என்று கூறிய அந்த மாணவி, பின்னர் செல்போனை கொடுக்க மறுத்தார்.
இதனால் அவர் கோபத்தில் கைகளால் அடித்து மகளிடம் இருந்த செல்போனை பிடுங்கினார். சக மாணவிகள் முன்னிலையில் தன்னை தந்தை அடித்ததால் அவமானம் அடைந்த அந்த மாணவி அழுதுகொண்டே திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் சென்றார். அங்கு தனது தந்தை நடுரோட்டில் தன்னை அடித்து அவமானப்படுத்திவிட்டதாகவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தார்.
மாணவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்ற போலீசார் தலைமையாசிரியர் முன்னிலையில் மாணவியின் தந்தையையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் செல்போனை பள்ளிக்கு எடுத்துவந்ததை தந்தை கண்டித்ததால் நடந்த பிரச்சினை என்பது போலீசாருக்கு தெரிந்தது.
உடனே மாணவியிடம், ‘நீ பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை பள்ளிக்கு எடுத்துவந்தது தவறு. இனி இதுபோல செய்யக்கூடாது’ என்றும் மாணவியின் தந்தையிடம் ‘மகள் என்றாலும் நடுரோட்டில் பலர் முன்னிலையில் அடித்தது மிகப்பெரிய தவறு. மகளை வீட்டில் வைத்து தான் கண்டிக்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்.