சோளப்பயிரில் புழுக்கள் தாக்கம் அதிகரிப்பு விதை உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
சோளப்பயிரில் புழுக்களின் தாக்கம் அதிகரித்து வருவதால் சம்பந்தப்பட்ட விதை உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். மேலும், கோரிக்கைகளை மனுக்களாகவும் கொடுத்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:–
இந்த ஆண்டு நடப்பு பருவத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். ஆனால் தற்போது குருத்துப்புழு, அமெரிக்கன் புழு, ராணுவப்புழு என்கிற பெயரில் உள்ள புழுக்கள் பயிர்களை நாசம் செய்து வருகிறது. மருந்துகள் அடித்தும் பயனில்லை. ஆனால் விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த விதைகளில் இந்த புழுக்களின் பாதிப்பு சிறிதளவும் இல்லை. இதனால் பாதிப்படைந்துள்ள விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்திருந்தாலும், இழப்பீடு வழங்க வேண்டும். இந்த புழுக்கள் தாக்குவதற்கு காரணமாக இருக்கும் சம்பந்தப்பட்ட விதை உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம்–பூளவாடி சாலையில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருப்பதாகவும், இந்த மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த கூட்டத்தின் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பராமரிப்பு பணியின் போது அவை சரிசெய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருமூர்த்தி கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பரம்பிகுளம்–ஆழியாறு மற்றும் அமராவதி பாசன திட்ட ஆயக்கட்டில் உள்ள வணிக பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்பட்ட வேளாண் நிலங்களை ஆயக்கட்டில் இருந்து நீக்க வேண்டும். தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காடுகளில் கிடைக்கும் நெரிஞ்சி மற்றும் அமுக்கிராங்கிழங்கு போன்ற மருத்துவ தாவரங்களை சில தொழிலாளர்கள் காடுகளில் இருந்து சேகரித்து மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறார்கள். அந்த மொத்த வியாபாரிகள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். ஆகவே மருத்துவ தாவர வாரியம் மற்றும் வேளாண்மை துறை இணைந்து நெரிஞ்சி மற்றும் அமுக்கிராங்கிழங்கு பயிர்களை விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஊத்துக்குளி தாலுகா செங்கப்பள்ளி முத்தம்பாளையம் மற்றும் அவினாசி தாலுகா காளிபாளையம் கிராமங்கள் வழியாக ஏற்கனவே உயர் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 3 கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மேலும் 3 கம்பிகள் கூடுதலாக அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அறிவிப்பை நில உரிமையாளர்களுக்கு மின்சார வாரியம் அறிவிக்காமல், அனுமதி பெறாமல் கூடுதல் பணி செய்து வருகின்றனர். இதனால் நில உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெற்று பணிகளை நடத்த வேண்டும்.
கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றி வருகின்றன. இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் சாயநீர் தேங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இதனால் விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு ‘டாப்செட்–கோ’ மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்க கடன் உதவியும், இலவச மின்சாரமும் வழங்கப்பட்டது. ஆழ்குழாய் கிணறு அமைக்க கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக கடன் தொகை வழங்கப்பட்டது. அதில் 50 சதவீதம் தொகை ‘டாப்செட்–கோ’ மூலம் மானியத்தொகை வழங்க வேண்டும். ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த மானியத்தொகை வழங்கப்படவில்லை. அது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதைப்பண்ணையாளர்களுக்கு மானியம் வழங்குவதை உடனடியாக ரத்து செய்யவேண்டும். தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான சந்தைபேட்டையில் ரூ.1 கோடியில் மீன் விற்பனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. எனவே தாராபுரம் நகரில் உள்ள பழைய மார்க்கெட்டில் உள்ள மீன்கடை, இறைச்சி கடைகளை சந்தை பேட்டைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.