திருப்பூரில் பயங்கரம்: விவசாயி கொடூரக் கொலை
திருப்பூரில் வீட்டில் இருந்த விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை நடந்த வீட்டில் இருந்ருது நகை–பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் நெருப்பெரிச்சலை அடுத்த ஜி.என்.பாலன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி ராதிகா. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவர்களுடைய மகள் சுவேதா (14). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சுவேதா அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வசிக்கும் அவருடைய பாட்டி பழனாத்தாள் பராமரிப்பில் இருந்து வருகிறாள். இதனால் சுப்பிரமணி மட்டும் தனியாக வசித்து வந்தார். பழனாத்தாள் தினமும் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்று சாப்பாடு கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பழனாத்தாள் சாப்பாடு கொடுப்பதற்காக சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற இரும்பு கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் வெளியில் நின்றபடி சுப்பிரமணியை கூப்பிட்டுள்ளார். நீண்டநேரமாக கூப்பிட்டும் வீட்டில் இருந்து பதில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பழனாத்தாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இரும்பு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் வரவேற்பு அறையில் சுப்பிரமணி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் அண்ணாத்துரை, அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது சுப்பிரமணியின் தலையில் மர்ம ஆசாமிகள் கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வீட்டின் உள்பக்க அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது.
மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து அதில் நகை மற்றும் பணம் உள்ளதா? என்று தேடிப்பார்த்து உள்ளனர். மேலும் கொலை நடந்த வீட்டில் மிளகாய் பொடியை தூவி, தண்ணீரை ஊற்றி உள்ளனர். இதையடுத்து போலீஸ் மோப்பநாய் அர்ஜூன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய், கொலை நடந்த வீட்டில் இருந்து ½ கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.பின்னர் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார், சுப்பிரமணியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் வெளிப்புற இரும்பு கேட் மற்றும் முன்பக்க கதவை பூட்டி விட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு அல்லது நேற்று அதிகாலை மர்ம ஆசாமிகள் சுப்பிரமணியின் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே சென்று உள்ளனர். பின்னர் அந்தஆசாமிகள் கதவை தட்டியபோது சுப்பிரமணி கதவை திறந்து உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆசாமிகள், சுப்பிரமணியின் கை, கால்களை கட்டி அவருடைய தலையில் அடித்துள்ளனர். இதில் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சுப்பிரமணியை கொலை செய்து விட்டு, தடயங்களை மறைப்பதற்காக மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதேபோல் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை நடந்த சுப்பிரமணியின் வீடு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள எந்த வீட்டிலும் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் மோப்ப நாயும் சந்தேகத்திற்கிடமான எந்த நபரையும், பிடிக்கவில்லை. போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் சுப்பிரமணிக்கு அந்த பகுதியில் யாரிடமும் முன்விரோதமோ, பகையோ இல்லை. எனவே எதற்காக இந்த கொலை நடந்தது என்பதை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பெரும்பாலான குற்ற சம்பவங்களில் போலீசாருக்கு பெரும் உதவியாக இருந்து வரும் கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் உள்ளிட்ட தடயங்கள் இந்த கொலை சம்பவத்தில் கிடைக்காததால் கொலையாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.