மயானத்துக்கு சாலை வசதி கேட்டு மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்– போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு


மயானத்துக்கு சாலை வசதி கேட்டு மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்– போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 4:45 AM IST (Updated: 1 Dec 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

மயானத்துக்கு செல்ல சாலை வசதி கேட்டு மறியல் செய்ய முயன்ற கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதனால் சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அருணாசலபுரம் கிராமத்தில் 400 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்துக்கு செல்லும் பாதையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனால் மயானத்துக்கு செல்ல கல்லூரிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதற்கு கல்லூரி நிர்வாகம் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காத நிலையில் மயானத்துக்கு செல்ல நிரந்தர பாதை வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மயானத்துக்கு செல்ல போதிய பாதை வசதி செய்து கொடுக்க வசதியாக ஆர்.டி.ஓ. தினகரன் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சிவகாசி தாசில்தார் பரமானந்த ராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் ராஜா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், அருணாச்சலபுரம் கிராம மக்கள் 50 பேர் வந்திருந்தனர்.

சமாதான கூட்டம் தொடங்கியவுடன் கிராம மக்கள் சார்பில் பேசியவர்கள், இந்த சமாதான கூட்டத்துக்கு தனியார் கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இப்படியே அவர்கள் வாய்தா வாங்கி வருதால் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது என்று கூறி சமாதான கூட்டத்தில் இருந்து வெளியே வந்து சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் சாலை மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. அப்போது கிராம மக்களுடன் வந்திருந்த பள்ளி மாணவர்கள் கதறி அழுதனர். மேலும் பெண்கள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

பின்னர் ஆர்.டி.ஒ. தினகரன், தாசில்தார் பரமானந்தராஜா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தனியார் கல்லூரிக்கு சென்று மயானத்துக்கு செல்லும் பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் 6 அடி அகலத்துக்கு சாலையை குறிக்கும் வகையில் அடையாளப்படுத்தி விட்டு இந்த பகுதியை மயானத்துக்கு செல்ல பயன்படுத்தும்படி கிராம மக்களிடம் தெரிவித்தனர். விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story