கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம கலைஞர்கள் ஆட்டமாடி நிவாரண தொகை திரட்டினர்


கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராம கலைஞர்கள் ஆட்டமாடி நிவாரண தொகை திரட்டினர்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:47 AM IST (Updated: 1 Dec 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிராமிய கலைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்று நிவாரண தொகை திரட்டினர்.

திருப்புவனம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் திரட்டும் வகையில் திருப்புவனம் கிராமிய நைய்யாண்டி மேளக்காரர்கள் மற்றும் தப்பாட்டக்காரர்கள் சார்பில் ஆட்டம், பாட்டத்துடன் நிதியுதவி கேட்டு நகரில் முக்கிய வீதி வழியாக சென்றனர். முன்னதாக திருப்புவனம் கோட்டை பஸ் நிறுத்தத்தில் கிராமிய கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்புவனம் புதூர் பகுதிக்கு சென்ற கலைஞர்கள் அங்கு நிவராண தொகை திரட்டினர்.

பின்னர் போலீஸ் லைன் தெரு, கோட்டை, பெரியகோவில் வீதி வழியாக சந்தை திடல் வந்து அங்கு நிவாரண உதவியை திரட்டி மாலையில் யூனியனில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாஸ், முருகன், ஞானசேகரன், கே.போஸ், சுந்தரம், மற்றொரு போஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல திருப்பத்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நீதிபதி சரவணசெந்தில்குமார் கொடியசைத்து அனுப்பி வைத்தார். வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். இந்த நிவாரணப் பொருள்கள் அறந்தாங்கி அருகேயுள்ள பெரியகோயில் என்ற ஊருக்கு அனுப்பப்படுகிறது.

இங்கிருந்து அனுப்பப்பட்ட 2 சரக்கு வாகனங்களில் அரிசி, பால், பிஸ்கட், மளிகைப்பொருட்கள், தண்ணீர், மெழுகுவர்த்திகள், கைலிகள், தீப்பட்டி, கோதுமை, பாய், உள்ளிட்ட அத்தியாவசப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. நிவாரணப் பொருட்களுடன் 3 வாகனங்களில் வழக்கறிஞர்கள் சென்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து பொருட்களை வழங்கினர்.

தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சரபேந்திரராசன் பட்டினம் கிராமம். மனோரா கிராமத்தில் உள்ள மீனவர் குப்பங்கள், பட்டுக்கோட்டை அருகே உள்ள மருங்கப்பள்ளம் ஆதிதிராவிடர் காலனி, புத்ரிவயல், இரண்டாம் புலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதில் நடையாளர் சங்கத் தலைவர் டாக்டர் குமரப்பன், செயலாளர் குருசாமி, பொருளாளர் சந்திரன், அரசு மருத்துவர் ராஜூ, பாண்டி, தினேஷ்குமார், கோடீஸ்வரன் ஆகியோர் பொருட்களை வழங்கினர்.


Next Story