நெய்வேலி பகுதியில்: தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார் - 15 பவுன் நகை மீட்பு


நெய்வேலி பகுதியில்: தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார் - 15 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 1 Dec 2018 4:51 AM IST (Updated: 1 Dec 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 15 பவுன் நகை மீட்கப்பட்டது.

நெய்வேலி,

நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை இந்திரா நகர், என்.எல்.சி. ஆர்ச் கேட் பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது என்.எல்.சி. ஆர்ச் கேட் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அரசப்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் விக்கி என்கிற விக்னேஷ் கண்ணன் (வயது 37) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்வடக்குத்தை சேர்ந்த பவுனாம்பாள் என்பவரிடம் நகை பாலிஷ் போட்டு தருவதாக கூறி 5 பவுன் நகையை அபேஸ் செய்து சென்றதும், நெய்வேலி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.

Next Story