புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் இன்சுலின் தட்டுப்பாடு - பாரதீய ஜனதா குற்றச்சாட்டு


புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் இன்சுலின் தட்டுப்பாடு - பாரதீய ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 Nov 2018 11:58 PM GMT (Updated: 30 Nov 2018 11:58 PM GMT)

புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் இன்சுலின் தட்டுப்பாடு நிலவுவதாக பாரதீய ஜனதா குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

புதுவை மாநிலத்தை ஆளும் முதல்–அமைச்சர் நாராயணசாமி ஏழை, எளிய மக்கள் வாழ்வில் விளையாடி வருகிறார். புதுவை மாநிலத்தில் 30 சதவீதத்துக்கும் மேலான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏழை மக்கள் அதிகம். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தினசரி நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து போடப்பட்டு வருகிறது.

கடந்த 10 நாட்களாக இன்சுலின் வழங்கப்படாததால் சர்க்கரை நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்சுலின் வாங்க பணம் இல்லை என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. மிகவும் மோசமான நிர்வாகம் புதுச்சேரியில் நிலவுகிறது. சட்டமன்றத்தில் டீ செலவுக்கு ரூ.3.25 கோடி செலவு செய்யும் காங்கிரஸ் அரசுக்கு ஏழை மக்களுக்கு இன்சுலின் மருந்து வாங்க பணம் இல்லையா? இந்த அரசை மக்கள் தூக்கி எறிய முன்வரவேண்டும்.

100 சதவீதம் முடங்கிப்போன துறையாக சுகாதாரத்துறை இருப்பதை பாரதீய ஜனதா வன்மையாக கண்டிக்கிறது. மக்களின் உயிர் காக்கக்கூடிய முக்கிய துறையான சுகாதாரத்துறைக்கே மக்களின் உயிர் மீது அக்கறை இல்லை.

புதுவையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிக்கடி இன்சுலின் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் நூற்றுக்கணக்கான ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனைகள் மூலம் எப்படி இன்சுலின் மருந்தை போட்டுக்கொள்ள முடியும்? மேலும் இத்துறை மட்டுமின்றி புதுச்சேரியில் அனைத்து முக்கிய துறைகளும் செயல் இழந்துள்ளதால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுவை அரசு போர்க்கால அடிப்படையில் இன்சுலின் மருந்து வழங்க முன்வரவேண்டும். இதை அனைத்து அமைச்சர்களும் உணர்ந்து தங்களது ஆடம்பர செலவை குறைக்கவேண்டும்.

இன்சுலின் என்பது உயிர்காக்கும் மருந்து. இதை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story