ரூ.1,526 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம்; ஐதரபாத் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுவையில் ரூ.1,526 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஐதராபாத் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்–அமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
புதுச்சேரி,
மத்திய அரசு நாடு முழுவதும் 100 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. அதன்படி மத்திய அரசு கடந்த ஜூன் 2017–ல் புதுச்சேரியை தேர்வு செய்தது. இதற்£க புதுச்சேரி ஸ்மார்ட்டு சிட்டி திட்டம் ரூ.1,828 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
ஸ்மார்ட்டு சிட்டி திட்ட வழிகாட்டுதல் படி கடந்த செப்டம்பர் 2017–ல் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டு நிறுவனம் புதுச்சேரி அரசால் தொடங்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த திட்ட மேலாண்மை ஆலோசகரை ஸ்மார்ட் சிட்டி திட்ட வழிகாட்டுதல் படி நிறுவ வேண்டும். அதைத்தொடர்ந்து இணையதளம் மூலமாக ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு ஐதராபாத்தைச் சேர்ந்த நிப்பான் கோயி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் கேபினெட் அறையில் ஐதராபாத் நிறுவனத்துடன் நேற்று இரவு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்–அமைச்சர் நாராயணசாமி, துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் அஸ்வினிகுமார் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதில் ஸ்மார்ட்சிட்டி தலைமை நிர்வாக அதிகாரியும், கலெக்டருமான அபிஜித் விஜய் சவுத்ரியும், தனியார் நிறுவன இயக்குனர் சம்பத்குமாரும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெற 3 முறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களால் திட்டத்தை பெற முடியவில்லை. நகர்ப்புற வளர்ச்சி எனக்கூறி கிராமங்களை அவர்கள் சேர்த்தது தான் இதன் காரணம். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையான ரூ.1,828 கோடியில் ரூ.1,526.28 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த ஐதராபாத் நிறுவனம் திட்ட மேலாண்மை ஆலோசகராக செயல்படும். தொழில்நுட்ப திட்ட வரையறையை நிறுவனம் அளிக்கும்.
இதில் குறிப்பாக சாலையை அகலப்படுத்துதல், குடிசை வீடுகளை கல் வீடுகளாக மாற்றுதல், பாதுகாப்பான குடிநீர், தடையில்லா மின்சாரம், சைக்கிள் ஓட்ட தனி பாதை, நடைபாதை, ஆம்பூர் சாலை கால்வாயில் படகு விடுதல் ஆகிய திட்டங்களில் இவர்களின் பங்கு இருக்கும். இதற்காக மத்திய அரசு ரூ. 100 கோடி முதற்கட்ட நிதி உதவி அளித்துள்ளது. 2–வது தவணைத்தொகை விரைவில் தர உள்ளது.
பிரான்ஸ் அரசு குடிநீர் திட்டத்துக்காக ரூ.500 கோடி தருவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உருவையாறில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.