மனைவியுடன் குடும்பம் நடத்த ஆயுள் கைதிக்கு 2 வாரம் ‘பரோல்’ சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இல்லற வாழ்வுக்காக ஆயுள் தண்டனை கைதிக்கு 2 வாரம் ‘பரோல்’ வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 28). இவரது மனைவி லட்சுமி (23). இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது. கொலை வழக்கில் ராமனுக்கு நெல்லை செசன்சு கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது மனைவி லட்சுமி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தன்னுடைய இல்லற வாழ்வுக்காக தன் கணவருக்கு 2 வாரம் ‘பரோல்’ வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
கைதியின் உரிமை
இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் ஆர்.பிரதாப்குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மேகராஜ் என்பவரது வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, ‘மனிதன் என்பவர் சமூக விலங்கு. அவன் வாழ சமூகமும், குடும்பமும் தேவை. அதுபோல தன்னுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வாழ்க்கை துணையும் தேவை. இது அவனது உரிமை. சிறைக்கைதி என்பதற்காக இந்த உரிமையை மறுக்க முடியாது.
எனவே, இல்லறவு வாழ்வு என்பது நல்லதொரு ஆரோக்கியமான குடும்ப சூழ்நிலை ஏற்படுத்தும்’ என்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, 2 வாரத்துக்கு அவருக்கு ‘பரோல்’ வழங்கவேண்டும்.
அரசு செலவு
அதாவது, வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ராமனுக்கு பரோல் வழங்கவேண்டும். இந்த 2 வார காலத்தில் சிறைத்துறை அதிகாரிகள், ராமனுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண் டும். ராமனுக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்காக ஆகும் செலவை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல, சிறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளையும் ராமன் தீவிரமாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
Related Tags :
Next Story