ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தமிழக அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தமிழக அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது  அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2018 3:15 AM IST (Updated: 1 Dec 2018 5:31 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தமிழக அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை தமிழக அரசு தனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;–

மக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொறுத்தவரை போராட்டக்குழு போராடிய காலத்தில் பல்வேறு நிலையில் அதிகாரிகள் மட்டத்திலும், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் பல்வேறு அமைப்புகள் இதனை அரசியலாக்கிய காரணத்தால் மே மாதம் 22–ந்தேதி கலவரம் ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் நடந்தது. ஆனால் போராட்டம் தொடங்கிய 40–வது நாளிலேயே தமிழக அரசு சார்பில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுபிக்காமல் ஆலை மூடப்பட்டு இருந்தது. அதனால் தான் நாங்கள், மூடப்பட்ட ஆலைக்கு எதிராக போராட வேண்டாம் என்று கூறி இருந்தோம்.

அரசின் நிலைபாடு

பசுமை தீர்ப்பாயம் குழு, ஸ்டெர்லைட் ஆலையால் நடந்த சம்பவத்துக்காக அமைக்கப்பட்டதே தவிர, அந்த குழுவிற்கு ஆலையை திறக்க வேண்டும் என்று சொல்ல அதிகாரம் கிடையாது. அந்த குழு தனது கருத்தை தெரிவித்து உள்ளது. பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட ஆலை இயங்குவது தமிழக எல்லைக்கு உட்பட்ட பகுதி. இங்கு ஒரு ஆலை இயங்குகிறது என்றால் அதனை கட்டுப்படுத்துவது மாநில அரசுக்கு கீழே உள்ள ஒரு துறை தான்.

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை மாசுகட்டுப்பாட்டு வாரியம் தான் அதன் உரிமத்தை புதுபிக்க வேண்டும். மத்திய அரசால் அது முடியாது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

கஜா புயல்

சென்னை தலைமை செயலகத்தில் இயங்குவது போல், கஜா புயல் பாதித்த 4 மாவட்டங்களில் அரசின் மொத்த நிர்வாகமும் இயங்கியது. மத்திய அரசின் அதிகாரிகள் குழு 4 மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த பின்னர், டெல்லியில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. பிரதமர் புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்ய வரவில்லை. இருந்த போது மத்திய அரசால் மேற்கொள்ளப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. எனவே மத்திய அரசு இதில் ஒருதலை பட்சமாக இருக்காது என்பதில் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story