டாஸ்மாக் கடையை மூடக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்து பெண்கள் முற்றுகை போராட்டம் தீ வைத்துக் கொள்வோம் என கூறியதால் பரபரப்பு


டாஸ்மாக் கடையை மூடக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்து பெண்கள் முற்றுகை போராட்டம் தீ வைத்துக் கொள்வோம் என கூறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 6:45 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மண்எண்ணெய் கேனுடன் திரண்ட பெண்கள் கடையை மூடாவிட்டால் தீ வைத்துக்கொள்வோம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம்,

வாணாபுரத்தை அடுத்த இளையங்கன்னி சூசை நகர் செல்லும் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தின்போது போலீசார் மற்றும் டாஸ்மாக் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 30 நாட்களுக்குள் டாஸ்மாக் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு மண்எண்ணெய் கேனுடன் திரண்டனர். அப்போது அவர்கள் கடையை திறக்கக் கூடாது, மீறி திறந்தால் நாங்கள் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்வோம் என்று கூறி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, வாணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்– இன்ஸ்பெக்டர் சேகர், நசுருதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் அடையாத பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வருகிற 14–ந் தேதிக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story