பாளையங்கோட்டையில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு மற்றொரு பெண்ணிடம் போலீஸ் போல் நடித்து கைவரிசை


பாளையங்கோட்டையில்  ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு மற்றொரு பெண்ணிடம் போலீஸ் போல் நடித்து கைவரிசை
x
தினத்தந்தி 2 Dec 2018 3:00 AM IST (Updated: 1 Dec 2018 7:02 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் ரோட்டில் நடந்து சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றனர்.

மூதாட்டி 

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ‘ஏ’ காலனியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (வயது 74). கருவூலத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சங்கரவடிவு (66). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சங்கரவடிவு அருகே வந்தனர். அதில் ஒருவன் கீழே இறங்கி சங்கரவடிவு கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறினான். பின்னர் வேகமாக 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்.

நூதன முறையில் அபேஸ் 

இதேபோல், நேற்று மதியம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் நூதன முறையில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது. அதாவது 65 வயது மதிக்கத்தக்க பெண் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது டிப்– டாப்பாக ஒரு நபர் அங்கு வந்தார். அவர் தன்னை போலீஸ்காரர் என்று கூறிக்கொண்டு, அந்த பெண்ணிடம் ஏன் வெளியே தெரியும் படி நகையை அணிந்து கொண்டு வந்தீர்கள், கழற்றி பைக்குள் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பிய அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றினார். உடனே அந்த நபர் நகையை பைக்குள் வைக்க உதவி செய்வது போல் பாசாங்கு செய்தார். அதே நேரத்தில் நைசாக நகையை அபேஸ் செய்து கொண்டு மாயமாகி விட்டார்.

சிறிது நேரத்தில் பைக்குள் வைத்த நகை சரியாக இருக்கிறதா? என்று அந்த பெண் பார்த்த போது நகையை காணவில்லை. மர்ம நபர் போலீஸ் போல் நடித்து நகையை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இதனால் அந்த பெண் கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story