ஆரணி தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம் போலீசார் விசாரணை


ஆரணி தனியார் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர் பிணம்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 1 Dec 2018 7:11 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி தனியார் விடுதியில் வாலிபர் தூக்கில் தொங்கியது. அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

ஆரணி,

ஆரணி, பெரியகடை வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதி உள்ளது. இதனை குத்தகை முறையில் பொன்னையன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த விடுதியில் சேலத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 26) என்பவர் அறை எடுத்து தங்கியிருந்தார். அவர் பிரபல கிருமி நாசினி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இங்கு தங்கியிருந்து மருந்துக்கடைகள், சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஆர்டர்கள் எடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டிய அவர் நேற்று காலை வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவு நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருந்தது.

உள்ளே அதிக சத்தத்துடன் டி.வி.ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த நபர் டி.வி.பார்த்துக்கொண்டிருக்கலாம் என விடுதி ஊழியர்கள் கருதினர். ஆனால் செல்போனும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து விடுதி குத்தகைதாரர் பொன்னையன் அங்கு வந்தார்.

அவரது முன்னிலையில் கடப்பாரை கம்பியால் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அப்போது வாலிபர் விக்னேஷ், அறையில் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அது குறித்து ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேபி, சப்–இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடலை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விக்னேஷ் இறந்தது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story