மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை பணியில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு


மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை பணியில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு
x
தினத்தந்தி 2 Dec 2018 3:30 AM IST (Updated: 1 Dec 2018 8:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல்படை பணிகளில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல்படை மற்றும் கப்பல்படை பணிகளில் சேர்வதற்கான பயிற்சி நிறைவு விழா நடந்தது.

மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடியில் மீன் வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் கப்பல் படை பணிகளில் சேர்வதற்கான சிறப்பு பயிற்சி கடந்த ஆகஸ்டு மாதம் 21–ந்தேதி தொடங்கி, நவம்பர் 30–ந்தேதி வரை நடைபெற்றது.

இந்த பயிற்சியின் நிறைவு விழா, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்து கொண்டு, பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:–

முன்னேற்றம்

இந்த பயிற்சி ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. இதை தொடர்ந்து மாணவர்கள் கடைபிடித்து, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும். இதேபோன்று கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களையும் ஊக்குவித்து பயனடைய செய்ய வேண்டும். 18 வயது முதல் 21 வயது வரையிலான காலம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம் ஆகும். அதனை தவறவிட்டால் வாழ்க்கையே சீர்கெட்டு விடும். இந்த வயதில் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி பயிற்சி விளக்க உரையாற்றினார். கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், மீன்துறை பொறியியல் மேற்பார்வையாளர் சம்சு நூர்தீன், மீன்துறை சார் ஆய்வாளர் சுமதி, கடலோர பாதுகாப்பு குழும சப்–இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story