மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் எச்.ஐ.வி. தொற்று பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டது கலெக்டர் பிரபாகர் தகவல்
மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் எச்.ஐ.வி. தொற்று பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டதாக கலெக்டர் பிரபாகர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினம் கடை பிடிக்கப்டப்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, சார்பு நீதிபதி தஸ்னீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 46 பயனாளிகளுக்கு மாத உதவி தொகைக்கான ஆணைகளையும், 2 பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு படிக்க உதவி தொகைகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார். தொடர்ந்து அவர் உறுதி மொழியை படிக்க அனைவரும் படித்து ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-
உலக எசி.ஐ.வி. தினம் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. விழிப்புணர்வு மூலம் நோய் பரவாமல் தடுக்கவும், அறிவியல் பூர்வமாக நோய் தொற்றை தடுக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஆறுதலையும், நல்ல ஆலோசனைகளையும் டாக்டர்கள் வழங்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்று பரவுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உழவர் பாதுகாப்பு அட்டைக்கு பதிலாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகை சேர்ந்த அலுவலர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாதாந்திர உதவித்தொகை மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் நாராயணா, தனி துணை கலெக்டர் சந்தியா, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, மாவட்ட மனநல மருத்துவர் கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story