மருதாநதி அணையில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


மருதாநதி அணையில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 1 Dec 2018 11:16 PM IST)
t-max-icont-min-icon

அய்யம்பாளையம் மருதாநதி அணையில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பட்டிவீரன்பட்டி, 

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை அமைந்துள்ளது. 72 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 68 அடி வரை தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து விவசாயத்துக்காக இடது மற்றும் வலது பிரதான வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். வலது பிரதான வாய்க் கால் தெற்கு வாய்க்கால் என்றும், இடது பிரதான வாய்க்கால் வடக்கு வாய்க் கால் என்று அழைக்கப்படுகிறது.

இந்த 2 வாய்க்கால்களின் மூலம் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. ஆனால் இந்த 2 வாய்க்கால்களிலும் கடந்த 1988-ம் ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்பு சுமார் 30 ஆண்டுகளாக தண்ணீர் திறக்காத காரணத்தினால் வாய்க்கால் கள் செடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. மேலும் வாய்க்கால்களும் சேதமடைந்து வந்தது.

இதையடுத்து இந்த வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் படி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்தில் 2 வாய்க்கால்களும் துர்வாரப்பட்டது. மேலும் தூர்வாரும் பணிகள் முடிந்தவுடன் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று அணையில் இருந்து வடக்கு வாய்க் காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வடக்கு வாய்க்காலில் உள்ள 30 மடைகளை தாண்டி இறுதி பகுதியை அடைந்த பின்பு தெற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டதால் சித்தரேவு, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

Next Story