விழுப்புரத்தில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
விழுப்புரத்தில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்,
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் விழுப்புரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி விழுப்புரத்தில் நடைபெற்றது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகில் முடிவடைந்தது. இதில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு எய்ட்ஸ் நோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
பேரணியை தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். சுகாதார பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடும்ப நல துணை இயக்குனர் பிரசாத், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் கவிதாராணி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன், மருத்துவ அலுவலர்கள் ராஜா, சாமுண்டீஸ்வரி, தமிழ்நாடு இன்ஸ்டி டியூட் முதல்வர் செந்தில்குமார் மற்றும் ஜெயகாந்தி, காரல்மார்க்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story