குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:30 PM GMT (Updated: 1 Dec 2018 7:07 PM GMT)

குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிகுடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பூந்தமல்லி,

குத்தம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருளப்பாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சரிவர குடிநீர் கிடைக்காததால் அருகில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் கோரிக்கை மனுவை அலுவலக ஊழியரிடம் அளித்து விட்டு சென்றனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்:-

இருளப்பாளையம் பகுதியில் சுமார் 120-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

இந்த நிலையில் இங்குள்ள ஆழ்துளை கிணறு மூலம் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீர் அனுப்பபட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது உள்ள இடத்தில் நிலத்தடி நீர் இல்லாததால் முறையாக தண்ணீர் வழங்கப்படுவது இல்லை. இதனால் அருகில் உள்ள இடத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கலாம் என்று பார்த்தால் அந்த இடம் தனியாருக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று பதிவேட்டில் உள்ளது. அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தால் இரு கிராமத்தினரிடையே தகராறு ஏற்படும் என்று அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் காசு கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story