பரோட்டா விலை கேட்டு தகராறு ஓட்டலை சூறையாடிய 7 பேர் கைது நெல்லையை சேர்ந்தவர்கள்


பரோட்டா விலை கேட்டு தகராறு ஓட்டலை சூறையாடிய 7 பேர் கைது நெல்லையை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 2 Dec 2018 3:30 AM IST (Updated: 2 Dec 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா விலையை கேட்டு தகராறில் ஈடுபட்டு, ஓட்டலை சூறையாடியதாக நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று முன்தினம் அரசியல் கட்சி ஒன்றின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டியை சேர்ந்த அக்கட்சியினர் தனியார் பஸ்சில் சென்னை வந்தனர்.

போராட்டம் முடிந்து இரவில் அவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச்சென்றனர். செல்லும் வழியில் குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் பஸ்சை நிறுத்திய அவர்கள், குரோம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலுக்கு சென்று பரோட்டா சாப்பிட முடிவு செய்தனர்.

அவர்களுடன் வந்த 16 வயது சிறுவன், ஓட்டலுக்குள் சென்று, ‘ஒரு பரோட்டா என்ன விலை?’ என்று கேட்டார். அதற்கு ஓட்டல் ஊழியர், ‘ஒரு பரோட்டா ரூ.25’ என்று கூறினார். அதற்கு அந்த சிறுவன், ‘எங்கள் ஊரில் ரூ.5-க்கு பரோட்டா கிடைக்கிறது. ஆனால் இங்கு இப்படி அதிக விலைக்கு விற்கிறீர்களே?’ என்றார்.

இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும், சிறுவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சிறுவன், பஸ்சில் தன்னுடன் வந்தவர்களிடம் இதுபற்றி கூறினார். உடனே அவர்கள் ஓட்டலுக்குள் சென்று ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது.

அப்போது ஓட்டல் ஊழியர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அருகில் இருந்த கற்கள், கட்டைகளை எடுத்து, ஓட்டலில் இருந்த நாற்காலி, மேஜை, தண்ணீர் கேன் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, ஓட்டலை சூறையாடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீசார், ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு ஓட்டலை சூறையாடியவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டியை சேர்ந்த பாலச்சந்திரன் (வயது 25), முத்துக்குமார் (24) மற்றும் 16 முதல் 18 வயது உடைய 5 பேர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story