புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்


புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் ஒன்றியத்தில் புயலால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை அமைச்சர்கள் அன்பழகன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் ஊழியர்கள் புதிய மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டதால் பல்வேறு பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு வழங்கப்படாத கிராமங்களுக்கு விரைவில் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் விழுந்து கிடந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் மேலும் 50 துப்புரவு பணியாளர்கள் நியமித்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கிராம புறங்களில் தேசிய ஊரக உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறை- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட 93 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகை மாவட்டத்தில், நாகை, வேதாரண்யம், கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு ஆகிய ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் “கஜா“ புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டு 100 மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகளை வழங்கினர். இதில் கலெக்டர் சுரேஷ்குமார், முதன்மை கல்வி அலுவலர் அமுதா, நாகை மாவட்ட கல்வி அலுவலர் வேதரத்தினம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story