கஜா புயலால் சேதமடைந்த படகுகள் சீரமைக்கப்படும் மீன்வளத்துறை இயக்குனர் தகவல்


கஜா புயலால் சேதமடைந்த படகுகள் சீரமைக்கப்படும் மீன்வளத்துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் சேதமடைந்த படகுகள் சீரமைக்கப்படும் என மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் கூறினார்.

நாகப்பட்டினம்,

கஜா புயல் கோரதாண்டவத்தால் நாகை மாவட்டம் பேரழிவை சந்தித்துள்ளது. குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள், வலைகள் சூறைக்காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல், வருவாய் இழந்துள்ளனர். காற்றில் தூக்கி வீசப்பட்ட படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக, மலை போல் குவிந்து கிடப்பதாலும், சவுக்கு காட்டுக்குள் வீசப்பட்டதாலும் அதனை மீட்க முடியால் மீனவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் மீனவர்களால் அப்புறப்படுத்த முடியாத குவிந்து கிடக்கும் படகுகளை, மீன்வளத்துறை மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் தலைமையில் அதிகாரிகள் நேற்று நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்துக்கு வந்தனர். பின்னர், மீனவர்கள் உதவியுடன் கிரேன் மூலம் படகுகள் அப்புறப்படுத்தும் பணியை பார்வையிட்டனர்.

இதை தொடர்ந்து மீன்வளத்துறை இயக்குனர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு உத்தரவின் பேரில், மீன்வளத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் உதவியுடன் சேறு மற்றும் சவுக்கு காடுகளில் சிக்கிய படகுகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நம்பியார் நகரில் இன்று (அதாவது நேற்று) மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காமேஸ்வரம், விழுந்தமாவடி, வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் படகுகள் சேற்றில் சிக்கியுள்ளன. அதனை கிரேன், பொக்லின் எந்திரம், டிராக்டர்கள் மூலம் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

புயலால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் பகுதி சேதமும், 800-க்கும் மேற்பட்ட படகுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. இந்த படகுகளை சீரமைக்க மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி சேதமடைந்த படகுகளை அதற்கான என்ஜின்கள், யார்டுகளை கொண்டு சீர்செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ், இணை இயக்குனர் அமல்சேவியர் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மீனவர்கள் கூறுகையில், தமிழக அரசு அறிவித்த படகுகளின் பகுதி சேத தொகை இன்னும் வந்துசேரவில்லை. அதனை உடனே வழங்கவேண்டும். இந்த நிவாரண தொகையை வைத்துதான் படகுகளை சீர்செய்து தொழிலுக்கு செல்லமுடியும். மேலும் படகுகளை சீர் செய்ய ரூ.1 லட்சத்துக்கும் மேல் செலவாகிறது. எனவே மீனவர்களின் நிலையை அறிந்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். 

Next Story