டிப்பர் லாரி மோதல் மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி பலி


டிப்பர் லாரி மோதல் மோட்டார் சைக்கிளில் சென்ற காதல் ஜோடி பலி
x
தினத்தந்தி 2 Dec 2018 5:00 AM IST (Updated: 2 Dec 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் கீழே விழுந்த காதல் ஜோடி, லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், 10-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவருடைய மகன் அன்பரசு என்ற அப்பாஸ்(வயது 20). மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்தவர் ஷேக்அலி. இவருடைய மகள் அமீர்நிஷா(18).

அன்பரசுவும், அமீர்நிஷாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு எண்ணூரில் இருந்து திருவொற்றியூரில் உள்ள அமீர்நிஷா வீட்டுக்கு இருவரும் ஜோடியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

எண்ணூர் கடற்கரை சாலையில் திருவொற்றியூர் அப்பர்சாமி கோவில் தெரு அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த காதலர்கள் இருவரும் டிப்பர் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அன்பரசு, அமீர்நிஷா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது. சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சாலையோரங்களில் கன்டெய்னர் லாரிகளையும் நிறுத்தி இருப்பதால், இருட்டில் வாகனங்களை முந்திச்செல்லும் போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்று கூறி ஆத்திரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக் கினர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் பலியான காதலர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story