‘கூகுள்’ வரைபட உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை கண்டறிய ‘செல்போன்’ செயலி


‘கூகுள்’ வரைபட உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை கண்டறிய ‘செல்போன்’ செயலி
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

‘கூகுள்’ வரைபட (மேப்) உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை கண்டறிய ‘செல்போன்’ செயலியை சென்னை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை போலீசார் சார்பில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முக்கிய சாலைகளில் 50 மீட்டர் இடைவெளியில் ஒரு சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலை, கதிட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலை, எல்டாம்ஸ் சாலை, கஸ்தூரி ரங்கன் சாலை, சேமியர்ஸ் சாலை, செனடாப் சாலை ஆகிய இடங்களில் 446 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதன் பயன்பாட்டினை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். அண்ணா சாலை ரோட்டரி சந்திப்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர், ‘வசந்த் அன் கோ’ உரிமையாளர் எச்.வசந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ‘சென்னை மாநகரில் 335 சாலைகளில் இதுவரை 1½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயல்பாட்டில் இருக்கின்றன.

3 லட்சம் முதல் 4 லட்சம் கேமராக்கள் வரை பொருத்தப்பட்டால் சென்னை முழுவதும் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடும்.’ என்றார்.

கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடத்தில் கண் காணிப்பு கேமராக்கள் இருக் கிறதா? என்பதை கண்டறிவதற்காக CCTV CHENNAI CITY எனும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இது கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகர் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) ஆகியோர் கண்காணிக்க முடியும்.

சென்னையில் 31 ஆயிரத்து 802 கடைகளில் 15 ஆயிரத்து 345 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தக்கூடிய வசதி உள்ளது கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story