மேகதாது அணை பிரச்சினை: எதிர்கட்சிகளின் போராட்டம் கண்துடைப்பு நாடகம் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
மேகதாது பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது கண்துடைப்பு நாடகம் என்று பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை,
பாரதீய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மூலாமாக, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதற்கு தீர்வு காண்பதற்கு அத்தனை முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். டெல்டா பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் மத்திய அரசின் பங்குள்ளது. ஆனால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் அவநம்பிக்கையோடு பேசி வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தருவது, சாலைகள் அமைப்பது, பயிர்கடன்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிதியமைச்சகத்திடம் நாங்கள் எடுத்துக்கூறியுள்ளோம். ஆனால் சில கட்சிகள் வேண்டுமென்றே இங்கு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றன.
மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழக பாரதீய ஜனதா ஒரு போதும் ஒத்துகொள்ளாது. மத்திய அரசு ஆய்வு செய்யத்தான் அனுமதி கொடுத்துள்ளது. மேகதாது விவாகரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண் துடைப்பு நாடகம். அருகில் உள்ள மாவட்ட மக்கள் கஜா புயல் பாதிப்பினால் கண்ணீர்வடிக்கும்போது, கண்ணீரைக் துடைக்க வேண்டிய காலகட்டத்தில் கண்துடைப்பு நாடகத்தைக் நடத்துகிறார்கள். இதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
திருநாவுக்கரசர் போன்றவர்கள் அணை கட்ட கூடாது என்று கர்நாடக மாநில அரசிடம் வலியுறுத்தலாமே. தமிழக அரசின் சட்ட நடவடிக்கைக்கு தமிழக பாரதீய ஜனதா தனது முழுமையான ஆதரவை தரும். சிலை கடத்தல் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீண்டும் விசாரணை நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்து இருப்பது நியாயத்திற்கு கிடைத்த தீர்ப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.