தமிழக– கேரள எல்லையில் காட்டு யானைகள் பலி அதிகரிப்பு: 65 கி.மீட்டர் வேகத்துக்குள் ரெயிலை இயக்க அறிவுரை


தமிழக– கேரள எல்லையில் காட்டு யானைகள் பலி அதிகரிப்பு: 65 கி.மீட்டர் வேகத்துக்குள் ரெயிலை இயக்க அறிவுரை
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக– கேரள எல்லைப்பகுதியில் ரெயிலில் அடிபட்டு காட்டு யானைகள் இறப்பதை தடுக்க, 65 கிலோ மீட்டர் வேகத்துக்குள் ரெயிலை இயக்க என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கோவை,

தமிழக– கேரள எல்லைப்பகுதியான மதுக்கரை முதல் வாளையாறு வரை உள்ள ரெயில் பாதையில் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறக்கும் பரிதாப சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கோவை அருகே உள்ள கேரள பகுதியான கஞ்சிக்கோடு என்ற இடத்தில் காட்டு யானை தண்டவாளத்தை கடந்தபோது மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது.

பொதுவாக காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே நடைபெறுகிறது. இந்த யானையும் அதிகாலை 3 மணி அளவில் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளது.

இதுவரை தமிழக– கேரள எல்லைப்பகுதியில் 17 யானைகள் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளன. தமிழக பகுதியான மதுக்கரை, எட்டிமடை, சோளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 7 யானைகள் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளன. கடந்த 2009–ம் ஆண்டு 4 யானைகள், 2010–ம் ஆண்டு ஒரு யானை, 2016–ம் ஆண்டு 2 யானைகள் என்று மொத்தம் 7 யானைகள் இறந்துள்ளன. பாலக்காடு, கஞ்சிக்கோடு, வாளையாறு பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் 10 யானைகள் இறந்துள்ளன.

யானைகள் கடந்து செல்லும் பகுதியில் ரெயில்களை இயக்கும் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி, யானை வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் என்று இருந்தாலும் காட்டு யானைகள் ரெயிலில் அடிபட்டு இறக்கும் பரிதாப சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இது தொடர்பாக ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு கூறப்பட்டுள்ள அறிவுரை குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

பொதுவாக பகல் நேரங்களில் ரெயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. யானை வழித்தடங்களில் உள்ள ரெயில்கள் இரவு நேரங்களில் குறைந்த வேகத்தில் இயக்க அறிவுரை ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்குமாறு என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் காட்டு யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் ரெயில்கள் செல்லும்போது ‘ஹார்ன்’ ஒலித்தபடி செல்லவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மதுக்கரை வனச்சரகர் செந்தில் கூறியதாவது:–

கேரள பகுதியான கஞ்சிக்கோடு பகுதியில் யானை இறந்துள்ளது. இருந்தாலும் கோவைப்பகுதியான மதுக்கரை, எட்டிமடை, சோளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காட்டு யானைகள் அடிக்கடி தண்டவாளங்களை கடந்து செல்லும் பகுதியான சோளக்கரை பகுதியில் வனத்துறை சார்பில் நிரந்தரமாக கண்காணிப்பு கோபுரம் கட்டப்பட்டு உள்ளது.

இதில் பகலில் 3 பேரும், இரவில் 6 பேரும் கண்காணிப்பதுடன், காட்டு யானைகள் தண்டவாள பகுதியில் நடமாட்டம் இருந்தால் ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு உஷார்படுத்தவும், ரெயில்களை அந்த பகுதிகளில் மெதுவாக இயக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

சோளக்கரை பகுதியில் யானைகளை கண்காணித்து ஒலி எழுப்பும் எலெக்டிரானிக் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர ரெயில் தண்டவாள பகுதிகளிலும் வன ஊழியர்கள் அடிக்கடி ரோந்து சென்று காட்டு யானைகளை கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் கஞ்சிக்கோடு பகுதியில் யானை இறந்த பகுதியில் தீவிர தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story