காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம்; பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னோடியாக திகழ்கிறது, பாபா அணு ஆராய்ச்சி மைய அதிகாரி பேட்டி
காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி முன்னோடியாக திகழ்கிறது என்று பாபா அணு ஆராய்ச்சி மைய அதிகாரி தெரிவித்தார்.
பெ.நா.பாளையம்,
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி கஸ்தூரிபாளையம்– மயானம் ரோடு மின்மயானம் அருகில் சிறப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் (பயோ மீத்தனேசன் பிளாண்ட்) ரூ.20 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி, பழக்கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் வாயு மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் மூலம் எரியூட்டு மயானத்தில் காற்று வெளியேற்ற பயன்படுத்தப்படும் மின் மோட்டார் இயக்கப்படுகிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 10 யூனிட் மின்சாரம் செலவாகிறது.
தமிழகத்திலேயே முதன் முறையாக பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் செயல்படும் இந்த திட்டத்தை பாபா அணு ஆராய்ச்சி மைய அதிகாரியும், மூத்த விஞ்ஞானியுமான ஜே.டேனியல் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், தரம் மிக்க இந்த எந்திரத்தின் செயல்பாடுகளை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பணியாளர்கள் திறம்பட செய்து நல்ல முன்னேற்றத்தை செய்துள்ளனர். இதனால் இயற்கை உரமும், மின்சாரமும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும். மேலும் சுற்றுப்புற சூழல் மாசடைவதும் தடுக்கப்படுகிறது. மற்ற பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு இப்பேரூராட்சி முன்னோடியாக திகழ்கிறது என்றார்.
அவருடன், பேரூராட்சி செயல் அலுவலர் பார்த்திபன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீப்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.