பல்லாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய பசுமாடு


பல்லாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை முட்டி தூக்கி வீசிய பசுமாடு
x
தினத்தந்தி 1 Dec 2018 11:00 PM GMT (Updated: 1 Dec 2018 8:14 PM GMT)

பல்லாரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை, பசுமாடு முட்டி தூக்கி வீசியது. இதில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெங்களூரு,

பல்லாரி மாவட்டம் கொட்டூர் டவுனில் குருகொட்டூரேஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பசுமாடுகளை காணிக்கையாக வழங்குவது வழக்கம். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் ஏராளமான பசுமாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் ேகாவிலில் இருந்து வெளியேறிய பசுமாடு ஒன்று சாலையில் உலா வந்தது.

இந்த பசுமாடு பஜார் ரோட்டில் நடந்து செல்பவர்களை முட்ட முயன்றது. இதனால் அந்த பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே, தபால் நிலையத்துக்குள் புகுந்த அந்த பசுமாடு அங்கிருந்த ஊழியர்களை தாக்க முயன்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்து பசுமாடு வெளியேறியது. இந்த வேளையில் அந்த ரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வந்தனர். அவர்களை பார்த்த பசுமாடு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்த பெண்ணை முட்டி தூக்கி வீசியது.

இதில் அந்த பெண்ணின் கால் எலும்பு முறிந்தது. இதற்கிடையே, பசுமாட்டின் அட்டகாசம் குறித்து அறிந்த கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார், கால்நடை டாக்டரை வரவழைத்தனர். பின்னர் பசுமாட்டுக்கு மயக்க ஊசி செலுத்தி அவர்கள் பிடித்து சென்றனர்.

முன்னதாக பசுமாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அந்த பெண் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், பசுமாடு முட்டி பெண்ணை தூக்கி வீசும் சம்பவத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story