போலீஸ் சூப்பிரண்டு வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை


போலீஸ் சூப்பிரண்டு வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 2 Dec 2018 4:15 AM IST (Updated: 2 Dec 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் நேற்று திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா மிட்டால்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் ஹரிஜான் (வயது 28). இவர் கடந்த 2012-ம் ஆண்டு போலீஸ் துறையில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். தொடக்கத்தில் தாவணகெரேயில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணி செய்த அவர் பின்னர் பாகல்கோட்டைக்கு பணி இடமாறுதல் பெற்றார்.

அதைத்தொடர்ந்து அவர் கடந்த ஒரு ஆண்டாக பாகல்கோட்டை டவுனில் உள்ள பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யாந்தின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த மஞ்சுநாத் ஹரிஜான், திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யாந்த் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மஞ்சுநாத் ஹரிஜானின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவனுடைய சாவில் சந்தேகம் உள்ளதாக மஞ்சுநாத் ஹரிஜானின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பாகல்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் சூப்பிரண்டு வீட்டில் பாதுகாப்பு பணியின் ஈடுபட்ட போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story