கொடுத்த கடன் ரூ.5 லட்சத்தை கேட்டு அரிசி வியாபாரியை காரில் கடத்திய 4 பேர் கைது
அந்தியூர் அருகே கொடுத்த கடன் ரூ.5 லட்சத்தை கேட்டு அரிசி வியாபாரியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடலை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 42). அரிசி வியாபாரி. இவருடைய மனைவி சுந்தரி (36).
கோபி பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் மகாதேவன் (28). இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (26), முகமதுயாசின் (24), குமார் (30), திருச்சி துறையூரை சேர்ந்த குமார் (30).
இவர்கள் 4 பேரும் கூட்டாக மெத்தை, தலையணை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
மகாதேவன் வெங்கடேஸ்வரனுக்கு வட்டிக்கு கடனாக ரூ.5 லட்சம் கொடுத்தாக தெரிகிறது. இந்த பணத்தை உரிய நேரத்தில் தராமல் வெங்கடேஸ்வரன் பதில் சொல்லி வந்துள்ளார். மகாதேவனும் பணத்தை கேட்டு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் வெங்கடேஸ்வரன் நேற்று முன்தினம் காலை சொந்த வேலை விசயமாக அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்துக்கு சென்றார். அப்போது அங்கு காரில் வந்த மகாதேவன், கார்த்திக், முகமது யாசின், குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெங்கடேஸ்வரனை காரில் தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.
அதைத்தொடர்ந்து மகாதேவன் தனக்கு சொந்தமாக மெத்தை கடையில் வெங்கடேஸ்வரனை அடைத்து வைத்தார். பின்னர் அவருடைய மனைவி சுந்தரியை செல்போனில் தொடர்புகொண்டு, ‘உன் கணவரை நாங்கள் கடத்தி வந்துவிட்டோம். அவர் வாங்கிய ரூ.5 லட்சத்தை என்னிடம் கொடுத்துவிட்டு உன் கணவரை அழைத்துச்செல்‘ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சுந்தரி உடனே ஆப்பக்கூடல் போலீசாரிடம் புகார் அளித்தார். வெங்கடேஸ்வரன் கடத்தப்பட்ட இடம் அந்தியூர் எல்லைக்குள் வருவதால் போலீசார் புகாரை அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்கள்.
அதன்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் மகாதேவனின் மெத்தை கடைக்கு விரைந்து சென்று உடனே வெங்கடேஸ்வரனை மீட்டார்கள். மேலும் மகாதேவன், கார்த்திக், முகமது யாசின், குமார் ஆகிய 4 பேர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்கள்.
அதன்பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி அவர்களை கோபி மாவட்ட சிறையில் அடைத்தார்கள்.
இந்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.