பெங்களூரு-மைசூரு இடையே எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஜனவரி 8-ந்தேதி பூமி பூஜை முதல்-மந்திரி குமாரசாமி தகவல்


பெங்களூரு-மைசூரு இடையே எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஜனவரி 8-ந்தேதி பூமி பூஜை முதல்-மந்திரி குமாரசாமி தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:45 AM IST (Updated: 2 Dec 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-மைசூரு இடையே எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஜனவரி 8-ந்தேதி பூமி பூஜை நடக்க இருப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள குமரகிருபா விருந்தினர் மாளிகையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று காலையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா கலந்து கொண்டார்.

அப்போது பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும், மாநிலத்தில் மற்ற பகுதிகளில் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை 8 வழிச்சாலையாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த ஏராளமான இடையூறுகள் ஏற்பட்டது. நிலம் கையகப் படுத்துதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள காலதாமதம் ஆனது. தற்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு(2019) ஜனவரி 8-ந் தேதி பெங்களூரு-மைசூரு இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. மேலும் சாலை விரிவுப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல் குறித்து 3 முறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இன்று (அதாவது நேற்று) மத்திய அரசின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் மற்ற பணிகளும் முடிக்கப்படும். இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story