அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தாயை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது


அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தாயை கழுத்தை அறுத்து கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 2 Dec 2018 3:45 AM IST (Updated: 2 Dec 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டதால் 80 வயது தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை தகிசர் பகுதியில் வசித்து வருபவர் யோகேஷ் (வயது53). இவரது தாய் லலிதா (80). சம்பவத்தன்று நள்ளிரவில் யோகேஷின் வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் மறுநாள் காலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் காலை 9.30 மணியளவில் யோகேஷின் வீட்டிற்கு சென்று கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது யோகேஷ் தூங்கி கொண்டு இருந்தார். ஆனால் அருகில் அவரது தாய் லலிதா, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், லலிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகேசை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

முதுமை காரணமாக லலிதாவிற்கு அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. தனியாக இருந்த யோகேசால் தாயை கவனிக்க முடியவில்லை. எனவே அவர் தாயை கொலை செய்ய திட்டம் போட்டார். சம்பவத்தன்று அவர் தூக்க மாத்திரைகள் கலந்த பாலை தாய்க்கு கொடுத்தார். பின்னர் நள்ளிரவு எழுந்து பார்த்தார். ஆனால் தாய் உயிரிழக்கவில்லை.

எனவே அவர் தலையணையால் முகத்தை அழுத்தி தாயை கொல்ல முயன்றார். அப்போதும் அவர் இறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் தாயின் உடல் அருகிலேயே படுத்து தூங்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் யோகேசை கைது செய்தனர். மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story