கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு நிதியில் ரூ.10 கோடி வரை பெற முடியும்


கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு நிதியில் ரூ.10 கோடி வரை பெற முடியும்
x
தினத்தந்தி 2 Dec 2018 4:00 AM IST (Updated: 2 Dec 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு நிதியில் ரூ.10 கோடி வரை பெற முடியும் என அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சிறுபான்மையினர் நல இயக்குநர் வள்ளலார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் இதில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது நீக்குவதற்கு ரூ.3 லட்சம் வரை அரசு நிதி வழங்கப்படுகிறது. இதனை கிறிஸ்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறுபான்மையின நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.50 லட்சம் அரசு நிதி வழங்குகிறது. புதிய வெளிச்சம் திட்டத்தின் கீழ் கிராமப்புறத்திலுள்ள சிறுபான்மையின பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு கிராமத்தில் 25 சதவீதம் சிறுபான்மையின மக்கள் இருந்தால் அதை பதிவு செய்து கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு நிதியில் ரூ.10 கோடி வரை பெற முடியும். அதற்கு மேல் தேவைப்பட்டால் மத்திய அரசின் நிதியும் பெற முடியும். எனவே, சிறுபான்மையின மக்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள சலுகைகளை தெரிந்து கொண்டு பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கரூர் அரசு காலனியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தை புனரமைப்பதற்காக ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் நிதியினையும், கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.18,000 மதிப்பிலான காசோலையும், 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.30,000 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) சிவப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story