திருவெறும்பூர் பகுதியை கலக்கிய பிரபல திருடன் கைது 86 பவுன் நகைகள் மீட்பு


திருவெறும்பூர் பகுதியை கலக்கிய பிரபல திருடன் கைது 86 பவுன் நகைகள் மீட்பு
x
தினத்தந்தி 2 Dec 2018 4:30 AM IST (Updated: 2 Dec 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் பகுதியை கலக்கிய பிரபல திருடனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 86 பவுன் நகைகளை மீட்டனர்.

திருவெறும்பூர்,

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், நவல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் அவர்கள் இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் கொள்ளையனை பிடிக்க திருவெறும்பூர் உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையில் சதீஸ்குமார், முருகேசன், பிரபாகரன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தனிப்படை போலீசார் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அங்கு நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகைதீன் மதார்சாகிப் மகன் சாதீக் என்ற பாரீஸ்கான்(28) என்பதும், அவர் பூட்டி கிடக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் பிரபல திருடன் என்பதும் தெரியவந்தது. அவர் மீது கீழக்கரை, ஏர்வாடி, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இதில் பல வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

இதில் சிறையில் இருக்கும்போது திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த சாகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பாரீஸ்கான் விடுதலையாகி வெளியே வந்தவுடன், துவாக்குடி அண்ணாவளைவு பகுதியில் சாகுல் நடத்தி வந்த சூப் கடையில் வேலை பார்த்தார். இந்நிலையில் பாரீஸ்கான் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சூப் கடையில் வேலை பார்த்து முடிந்த பின்னர், இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார்.

இவர் காட்டூர் அம்மன் நகரை சேர்ந்த சுரேஷ் குமார் வீட்டில் 54½ பவுன், நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த ஆரோக்கிய சாமி வீட்டில் 6 பவுன், சின்னசூரியூரை சேர்ந்த ராஜேஸ்வரி வீட்டில் 4 பவுன், சோழமாதேவி மாணிக்கம் நகரை சேர்ந்த மாரிசாமி வீட்டில் 2 பவுன், பூலாங்குடி காலனியை சேர்ந்த ராமு வீட்டில் 16 பவுன், குண்டூரை சேர்ந்த லேணா வீட்டில் 2 பவுன் மற்றும் காட்டூர் பாலாஜி நகரை சேர்ந்த முத்துவேல் வீட்டில் 1½ பவுன் நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்துள்ளார். கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்தும், சில நகைகளை விற்றும் அந்த பணத்தை செலவு செய்துள்ளார், என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து திருட்டு நகைகள் 86 பவுனை மீட்டனர். மேலும் பாரீஸ்கானிடம் இருந்து கதவின் பூட்டு மற்றும் பீரோவை உடைக்க பயன்படுத்திய 2 இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட நகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story