“அரசியலில் கமல்ஹாசன் சறுக்குவார்” அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


“அரசியலில் கமல்ஹாசன் சறுக்குவார்” அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2018 5:00 AM IST (Updated: 2 Dec 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

“அரசியலில் கமல்ஹாசன் சறுக்குவார்“ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. அந்த பொருட்கள் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. அரிசி, பருப்பு, போர்வை, நாப்கின், பிஸ்கட், குடிநீர் பாட்டிகள் உள்பட மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ 5 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

கமல்ஹாசன் நடிப்பு உலகத்தில் சிறந்த கலைஞர். தமிழன். உலக நாயகன். நடிப்பில் சிறந்த மேதை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே வேளையில் அவர் தூய்மையானவர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

சினிமாவில் நடித்து விட்டு, எல்லோரும் முதல்–அமைச்சராக வேண்டும் என்று நினைப்பது சரியில்லை. தமிழக மக்களுக்கு அவர் இதுவரை என்ன செய்தார்?

நடிகர் வருகிறார் என்பதற்காக கூட்டம் கூடுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து விட்டு, அதன்பிறகு கமல் பேச வேண்டும். எங்கும் செல்லாமல், எங்கோ இருந்து கொண்டு அ.தி.மு.க. அரசு துருப்பிடித்த அரசு என்று கூறுவது சரியானது கிடையாது.

அவரது செயல்பாடுகளால் அவரது மக்கள் மய்யத்தில் உள்ளவர்களே புண்படுகிறார்கள். அவர் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் நடிப்பு உலகிற்கு செல்லட்டடும். அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரலாம். சாதிக்கலாம். ஆனால் அரசியலில் அவருக்கு வாய்ப்பு இல்லை. சறுக்குவார். அவர் இன்னும் கற்றுக்கொண்டு அரசியலுக்கு வர வேண்டும்.

நிவாரணப்பணிகளை தமிழக அரசு வேகமாக செய்து வருகிறது. அதில் எந்த சுணக்கமும் இல்லை. ஆனால் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை மக்களிடம் பரப்பி வருகின்றனர். பிரதமரை சந்தித்து புயலின் தாக்கம் மற்றும் சேதாரம் பற்றி முதல்–அமைச்சர் விரிவாக கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story