பெரியாறு கால்வாய் தண்ணீர் மூலம் ஊருணிகளை நிரப்ப நடவடிக்கை; அமைச்சர் பாஸ்கரன் தகவல்
சிவகங்கை பகுதியில் உள்ள ஊருணிகளை பெரியாறு கால்வாய் தண்ணீர் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை,
முல்லை பெரியாறு பாசன கால்வாய் மூலம் சிவகங்கை பகுதியில் உள்ள ஊருணிகளுக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்த ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமார், தாசில்தார் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், நகராட்சி ஆணையாளர் அயூப்கான் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொன்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:– வறட்சியான மாவட்டமான இங்கு தமிழகம் முழுவதும் புயலால் பலத்த மழை பெய்த போது கூட சிவகங்கை பகுதியில் மழை பெய்யவில்லை. இதனால் நகரில் உள்ள ஊருணி, குளங்கள், கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த சமயத்தில் பெரியாறு கால்வாயில் வரும் நீரை இந்த ஊருணி, குளங்கள், கண்மாய்களுக்கு கொண்டு வந்து நிரப்பினால் தண்ணீரை சேமிப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
எனவே பெரியாறு கால்வாய் தண்ணீரை கொண்டு வந்து சிவகங்கை பகுதியில் உள்ள வறண்ட கண்மாய், குளங்கள், ஊருணிகளை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக வரத்து கால்வாய்கள் அனைத்தையும் அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.