மீனவர்கள் அடையாள அட்டையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும்; கலெக்டர் அறிவுரை
மீனவர்கள் அடையாள அட்டையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுரை வழங்கினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கடற்படை நிலைய கமாண்டர் அனில்குமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மீனவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசியதாவது:–
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சீருடை இல்லாத காவலர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய பங்கு வகிப்பதில் மீனவர்களுக்கும் அதிகம் பங்கு உண்டு. கடலுக்குள் எந்தவொரு சம்பவம் நடைபெற்றாலும் முதலில் மீனவர்களுக்கு தான் தெரிய வரும்.
அதனால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் சந்தேகப்படும்படியான எந்தவொரு சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும்.அடையாள அட்டை இல்லாமல் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.