கருவறை சிற்பங்கள்


கருவறை சிற்பங்கள்
x
தினத்தந்தி 2 Dec 2018 2:11 PM IST (Updated: 2 Dec 2018 2:11 PM IST)
t-max-icont-min-icon

தாயின் கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் கத்தார் நாட்டில் பிரமாண்டமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தாயின் கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை சித்தரிக்கும் வகையில் கத்தார் நாட்டில் பிரமாண்டமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருமுட்டையில் தொடங்கி கருவில் இருக்கும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி நிலைகளை காட்சிப்படுத்தும் விதத்தில் அவை அமைந்திருக்கின்றன. தாயின் கருவறைக்குள் குழந்தை எப்படி வளர்கிறது? எத்தகைய நிலையில் அமர்ந்திருக்கிறது? ஒவ்வொரு மாதத்திலும் அதன் வளர்ச்சியில் எத்தகைய மாற்றங்கள் நிகழ்கிறது? என்பதை விளக்குகின்றன. தொப்புள் கொடி மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையே நடைபெறும் உணர்வுப்பூர்வமான பரிமாற்றத்தையும் அந்த சிற்பங்கள் சித்தரிக்கின்றன.

குழந்தையின் வளர்ச்சி நிலைகளை 14 விதமான சிற்பங்களாக உருவாக்கி இருக்கிறார்கள். அவைகளை கர்ப்பப்பை வடிவமைப்பு தாங்கி நிற்கிறது. சிற்பங்கள் 16 முதல் 36 அடி உயரத்தில் அமைந்திருக்கின்றன. இவற்றின் மொத்த எடை 216 மெட்ரிக் டன். இதனை இங்கிலாந்தை சேர்ந்த டேமியன் ஹிர்ஸ்ட் என்பவர் வடிவமைத்திருக்கிறார். இந்த சிற்பங்கள் கத்தார் தலைநகரம் தோஹாவில் உள்ள சிட்ரா மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வெளிப்புறத்தில் சாலைகளுக்கு மத்தியில் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றை 2013-ம் ஆண்டிலேயே நிறுவிவிட்டார்கள். கருப்பையையும், அதில் குழந்தை வளரும் விதத்தையும் வடிவமைத்திருப்பதால் சர்ச்சைகளும், போராட்டங்களும் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்தில் சிற்பங்களை மூடியே வைத்திருந்திருக்கிறார்கள். சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக திறந்திருக்கிறார்கள். அவை திறக்கப்பட்ட சிலநாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ தொடங்கிவிட்டது. அவர்களே எதிர்பாராத அளவிற்கு சர்ச்சைகளுக்கு மத்தியில் பலதரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘‘இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பதற்கான நோக்கத்தை எல்லோரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று நினைத்தோம். அதற்கு மாறாக பல தரப்பினரும் சிற்ப வேலைப்பாடுகளை உணர்வுப்பூர்வமாக புரிந்துக்கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. குழந்தைகள் மற்றும் பெண்களின் சுகாதார நலனில் நாங்கள் கொண்டிருக்கும் அக்கறையை பிரதிபலிக்கும் என்று நம்புகிறோம்’’ என்கிறார், கத்தார் பவுண்டேஷன் அமைப்பை சேர்ந்த சிற்ப கலைஞரான லாய்லா.

Next Story