மாவட்ட செய்திகள்

கனவு நாயகி - பட்டுகோட்டை பிரபாகர் + "||" + Dream heroine

கனவு நாயகி - பட்டுகோட்டை பிரபாகர்

கனவு நாயகி - பட்டுகோட்டை பிரபாகர்
படுக்கையறைக்கு ஒரு டவலை மட்டும் உடலில் சுற்றிய அபிநயா வந்து மாற்று ஆடையைக் கையில் எடுத்தாள்.
முன்கதைச் சுருக்கம்:

பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள். அப்போது அபிநயா ரகசியமாக ஒருவரை காதலித்து வரும் விஷயத்தை தீபக், இனியவனிடம் சொல்கிறான். அந்த காதலை கலைத்து அவளுடைய திமிரை அடக்கி விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். இதற்கிடையே தாயாரின் எதிர்ப்பை மீறி சொந்தமாக படம் எடுக்கும் முயற்சியில் அபிநயா ஈடுபடுகிறாள். இந்த விஷயம் அவளுடைய தாயாருக்கு தெரியவர, தான் காதலிக்கும் விக்டர் மூலம் படத்தயாரிப்பு வேலையில் ஈடுபடப்போவதை அபிநயா ஒப்புக்கொள்கிறாள். அமுதாவை பெண் பார்க்க வருகிறார்கள். மாப்பிள்ளை கார்த்திகேயனின் அக்கா கணவர் அமுதாவை ஏற்கனவே பார்த்திருப்பதாக கிசுகிசுக்கிறார். அதுபற்றி கார்த்திகேயன் கேட்க, ‘வேலை பார்க்கும் இடத்தில் நடந்த சிறிய பிரச்சினையால் போலீஸ் நிலையம் சென்றதாக’ அமுதா கூறுகிறாள். இதற்கிடையே விக்டரை போனில் தொடர்பு கொண்டு பேசும் அபிநயா தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறாள்.விக்டரை சந்திக்கும் அவனுடைய மாமனார் விவாகரத்து முடிவை கைவிட்டு தன் மகளுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்துகிறார். இதனால் விரக்தியடையும் விக்டர், அபிநயாவின் கருவை கலைக்க முயற்சிக்கிறான்.

படுக்கையறைக்கு ஒரு டவலை மட்டும் உடலில் சுற்றிய அபிநயா வந்து மாற்று ஆடையைக் கையில் எடுத்தாள்.

பால்கனியில் நின்ற விக்டர் யாருடனோ சன்னக் குரலில் போனில் பேசுவது மெதுவாக ஆனால் தெளிவாக இங்கேக் கேட்டது. ‘‘செலவைப் பத்திப் பிரச்சினையில்லப்பா..கச்சிதமா முடிச்சுடுவாங்களா அந்த டாக்டர்?’’ என்றான் விக்டர்.

இவள் உடுத்தி முடித்து ஹேர் டிரையர் எடுத்து ஒப்பனை மேஜை முன் அமர்ந்து தன் ஈரக் கூந்தலில் வெப்பக் காற்றைச் செலுத்தினாள்.

அதன் ஓசையில் திரும்பிய விக்டர், ‘‘சரி.. அப்பறம் பேசறேன்’’ என்று போனில் முடித்துக்கொண்டு அருகில் வந்து அவளின் தோள்களில் இரண்டு கைகளையும் வைத்தான்.

‘‘மேக்கப் போடாம இருக்கறப்போவும் அழகா இருக்கற ஒரே நடிகை நீ மட்டும்தான் அபிநயா’’

‘‘அப்படியா?’’ என்றாள்.

அவள் தலை மீது தன் தலையை வைத்து எதிரில் கண்ணாடியில் பார்த்தபடி,‘‘என் கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை நான் சந்திச்சிருக்கக் கூடாதா?’’ என்று பெருமூச்சு விட்டான்.

‘‘அதனால என்ன? கொஞ்சம் லேட்டானாலும் எப்படியோ சந்திச்சிட்டோம்ல?’’ என்றவள் திரும்பி அவன் முகத்தை தன்னருகில் இழுத்து விக்டரின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அந்த முத்தத்தை அவள் இதழ்களில் தொடரும் நோக்கத்தில் அவன் இன்னும் குனிந்தபோது இயல்பாக அவனை விலக்கி எழுந்தாள்.

‘‘பசிக்குது விக்டர்.’’

‘‘ஆர்டர் செய்யட்டுமா? என்ன வேணும் சொல்லு’’

அவள் சொன்ன அயிட்டம்களை வீட்டில் கொண்டு வந்து தரும் நிறுவனத்திற்கு போனில் ஆர்டர் செய்து முடித்து ஒரு ஷோபாவில் அமர்ந்தான் விக்டர்.

அவன் அருகில் ஒட்டி அமர்ந்து உரிமையுடன் அவன்மீது சாய்ந்துகொண்ட அபிநயா, ‘‘டைவர்ஸ் என்னாச்சி?’’ என்றாள்.

‘‘நான்சி சம்மதிச்சிட்டா. அவளுக்கு வேற வழி இல்லையே?’’

‘‘அப்படியா?’’ என்று சிரித்தாள்.

‘‘எதுக்கு சிரிக்கிறே?’’

‘‘நான்சியோட அப்பா சமாதானத்துக்கு வந்ததா காத்துல ஒரு சேதி வந்துச்சி’’ என்றதும் விக்டருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘‘அது.. அது.. உனக்கு எப்படித் தெரியும் அபி?’’

‘‘அதுவா முக்கியம்? நான் கேள்விப்பட்டது நிஜம்தானே?’’

‘‘நிஜம்தான். ஆனா நான் முடியவே முடியாதுன்னுட்டேன். அவ ஒரே ஒரு தடவை என்னை சந்திச்சிப் பேசணும்னு ஆசைப்படறாளாம்..’’

‘‘அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?’’

‘‘அதெல்லாம் முடிஞ்சி போன விஷயம்.. இனிமேப் பேச எதுவுமில்லன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்’’

‘‘நான்சி என் மேல கோபமா இருப்பால்ல?’’

‘‘என் மேலதான் அவளுக்குக் கோபம்’’

‘‘தன் புருஷனை அவகிட்டேர்ந்து பிரிச்சிட்டேன்னு அவளுக்கு இயல்பா என் மேல ஒரு கோபம் இருக்கத்தானே செய்யும்?’’

‘‘அவ சண்டை போட்டது என்னோடதான் அபி’’

‘‘எங்கம்மாகூட தப்பா நினைச்சிட்டிருக்காங்க விக்டர்’’

‘‘என்ன சொன்னாங்க?’’

‘‘நான்தான் உங்களை மயக்கி என் பக்கம் இழுத்துட்டதா சொல்றாங்க. இது தப்புன்னு கண்டிக்கிறாங்க’’

‘‘நான்சென்ஸ்.. நான்தானே உங்கிட்ட ப்ரொப்போஸ் செஞ்சேன்.. உங்கம்மாட்ட நான் வேணா பேசறேன்’’

‘‘அவங்களுக்கு இன்னொரு கவலையும் இருக்கு விக்டர்’’

‘‘என்ன அது?’’

‘‘என் மேல உள்ள மோகம் முடிஞ்சதும் என்னைக் கத்தரிச்சி விட்ருவிங்கன்னும் சொல்றாங்க’’

‘‘சீச்சீ..இது மோகம் இல்ல அபிநயா. காதல். வெறும் மோகம் மட்டும் இருந்தா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதைப் பத்தி சிந்திப்பேனா?’’

‘‘விக்டர்.. நாம கல்யாணம் செஞ்சுக்கப் போறது நிஜம்தானா?’’

‘‘கண்டிப்பா. உனக்கு அதிலென்ன சந்தேகம்?’’

‘‘பின்னே எதுக்கு நம்ம வாரிசைக் கலைக்கறதைப் பத்தி யோசிக்கிறீங்க?’’

தூக்கிவாரிப் போட்டது விக்டருக்கு.

‘‘என்ன சொல்றே?’’

‘‘நீங்க போன்ல பேசினதைக் கேட்டுட்டேன். என் வயித்துல வளர்ற கருவைக் கலைக்கறதைப் பத்திதானே கேட்டுட்ருந்தீங்க? இல்லன்னு பொய் சொல்ல வேணாம் விக்டர்’’

‘‘அது.. அது.. சும்மா விசாரிச்சி வெச்சேன்’’

‘‘என்ன உங்க விசாரணையில தெரிஞ்சது?’’

‘‘மும்பைல பரமேஸ்வரின்னு ஒரு டாக்டர். தமிழ் டாக்டர். ஒரே நாள்ல முடிஞ்சிடுமாம். எந்த ரெக்கார்டுலயும் வராதாம். ரகசியம் வெளில போகாதாம்..’’

அவன்மீது சாய்ந்திருந்தவள் வெடுக்கென்று விலகினாள்.

‘‘அப்போ.. முடிவு செஞ்சிட்டிங்க. அப்படித்தானே?’’

‘‘உனக்காகத்தான் அப்படி யோசிச்சேன் அபி’’

‘‘எனக்காகவா? புரியல..’’

‘‘ஆமாம் டியர். உன் கைல இப்போ மூணு படம் இருக்குன்னுசொன்னே. இப்ப நீ வயித்தைத் தள்ளிக்கிட்டு நின்னா.. உன் சினிமா கேரியர் என்னாகும்னு யோசிச்சேன். கல்யாணத்துக்கு அப்புறமும் நடிப்பேன்னு வேற சொல்லிருக்கே. அதனாலதான் நான் அப்படி யோசிச்சேன். உன் கேரியர்ல ஒரு தொய்வு ஏற்படறப்ப குழந்தையைப் பத்தி யோசிக்கலாமேன்னு தோணிச்சு. நமக்கு ஒண்ணும் வயசாயிடலையே.. நான் சொல்றது தப்பா? நீயே சொல்லு. இதுல உன் முடிவுதான் முக்கியம். பெத்துக்கலாம்னு நீ முடிவு செஞ்சா எனக்கு ஒரு மறுப்பும் இல்ல’’

‘‘ஸாரி விக்டர். ஐ ம் வெரி ஸாரி. என் சினிமா வாழ்க்கையைப் பத்தி நீங்க யோசிச்சிருக்கீங்க. ஆனா என்னைக் கழட்டிவிட நினைக்கிறீங்களோன்னு முட்டாள்த்தனமா நினைச்சிட்டேன்.. ஸாரி. உங்களை நான் சந்தேகப்பட்டுட்டேன்’’

‘‘பரவால்ல அபி. உன் இடத்துல நான் இருந்தாலும் இப்படித் தோணும். உனக்கு இந்த சந்தேகம் அடிக்கடி எட்டிப் பார்த்துக்கிட்டே இருக்கு. நான் உன்னை பரிபூரணமா நேசிக்கிறேன்.. நான்சியோட டைவர்ஸ் நடந்தப்பறம் உன்னை ஊரறிய கல்யாணம் செஞ்சுக்கத்தான் போறேன். இதுல எந்த மாற்றமும் இல்ல. உனக்கு என் வார்த்தையில முழு நம்பிக்கை வரணும்னா நான் என்ன செய்யணும்னு சொல்லு’’

‘‘வெரி சிம்பிள். என் பேர்ல ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம்தொடங்கணும். அப்போ எனக்கு நம்பிக்கை வரும்’’

‘‘அவ்வளவுதானே? அதுக்கு எவ்வளவு தேவைப்படும்?’’

‘‘முதல்ல சின்ன பட்ஜெட்ல ஒரு படம் செய்யலாம் விக்டர். ஜஸ்ட் பத்து கோடி பட்ஜெட்ல..’’

அவள் கையை எடுத்து அதன் மேல் தன் கையை வைத்த விக்டர், ‘‘நாளைக்கே அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் ஆரம்பிக்கலாம் அபிநயா. பத்து கோடி ஒரே வாரத்துல ஏற்பாடு பண்றேன்.சந்தோஷமா?’’ என்றான்.

உற்சாகமாகப் புன்னகைத்த அபிநயா இப்போது அவளாக முன்வந்து அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பொருத்தி ஆழமாக முத்தமிட்டாள். அவளை இடுப்பில் கை போட்டு அணைத்தபடி கட்டிலை நோக்கி நகர்த்தினான் விக்டர்.

***

ஒரு அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக்கு உறக்கம் கலைந்து எழுந்த ராஜலட்சுமி சுவரில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தாள். இரவு இரண்டு பதினைந்து.

எழுந்து நடந்து நேரெதிரில் இருந்த அபிநயாவின் அறைக்கு வந்தாள்.

அபிநயா கழுத்து செயின், காதின் கம்மல்களைக் கழற்றிக்கொண்டிருந்தாள்.

‘‘இப்பதான் வந்தியா அபி?’’

‘‘ஆமாம்மா. ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லவா?’’

‘‘என்ன?’’

‘‘விக்டர் பத்து கோடி குடுக்கறேன்னு சொல்லிட்டார். சினிமா கம்பெனி ஆரம்பிக்கிறதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யச்சொல்லிட்டார்.’’

‘‘ரொம்ப சந்தோஷம் அபி.’’

‘‘ஆனா.. என் வயித்துல வளர்ற கருவை மும்பைல அவர் சொல்ற டாக்டர்ட்ட போய் கலைச்சுக்கணும்னு எதிர்பார்க்கறார்’’

‘‘அடிப்பாவி! என்னடி இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே? இந்த விஷயம் எனக்கேத் தெரியாதே..’’

அபிநயா வாய்விட்டுச் சிரித்தாள்.

‘‘சொல்லிட்டு சிரிடி. ஏன் அஜாக்கிரதையா இருந்தே?’’

‘‘அய்யோ.. அம்மா! உன் பொண்ணை நீ புரிஞ்சி வெச்சிருக்கறது அவ்வளவுதான். நான் அஜாக்கிரதையா இருப்பேனா? நான் கர்ப்பமா இருக்கேன்னு ஒரு பொய்யை சொன்னதாலதான் பத்து கோடி குடுக்க உடனே சம்மதிச்சாரு.’’

மீண்டும் சிரித்தாள் அபிநயா.

-தொடரும்

அதிகம் வாசிக்கப்பட்டவை