கொடைக்கானல் அருகே பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் பலி


கொடைக்கானல் அருகே பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 2 Dec 2018 10:15 PM GMT (Updated: 2 Dec 2018 6:52 PM GMT)

கொடைக்கானல் அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற தந்தையும் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொடைக்கானல்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் எர்ரம்பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 55). அவருடைய மனைவி சுப்புலட்சுமி (48). இவர்களது மகன் ராஜபாண்டி (27). ரவி தனது குடும்பத்துடன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானல் அருகே உள்ள பேத்துப்பாறை கிராமத்தில் பிச்சை என்பவர் தோட்டத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை ராஜபாண்டி குளித்துவிட்டு துணியை அங்குள்ள கம்பியில் காயப்போட்டுள்ளார். அப்போது மின்கசிவு காரணமாக, அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. இதனையடுத்து ராஜபாண்டி மீது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த தனது மகனை காப்பாற்ற ரவி முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. சிறிது நேரத்தில் தந்தை, மகன் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதனைக் கண்ட சுப்புலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் நீலமேகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தந்தை-மகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் தோட்டத்தில் உள்ள மின் வயர்கள் சரிவர பராமரிப்பு இல்லாமல் இருந்த காரணத்தால் மின்கசிவு ஏற்பட்டதும், தொடர் மழை காரணமாக சுவர்கள் ஈரதன்மையுடன் இருந்ததும் தெரியவந்தது. ஈரமாக இருந்த சுவரில் ஆணியடித்து துணியை உலர்த்தும் போது வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திண்டுக்கல் மேற்பார்வைபொறியாளர் ஸ்டீபன் ஆரோக்கியம் தெரிவித்துள்ளார்.

Next Story