நீடாமங்கலம் அருகே தண்டவாளம் இணைப்பில் பழுது; ரெயில்கள் தாமதம் பயணிகள் அவதி


நீடாமங்கலம் அருகே தண்டவாளம் இணைப்பில் பழுது; ரெயில்கள் தாமதம் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 3 Dec 2018 4:30 AM IST (Updated: 3 Dec 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே தண்டவாளம் இணைப்பில் ஏற்பட்ட பழுதினால் ரெயில்கள் தாமதமாக சென்றன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 4.45 மணிக்கு காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரெயில் வந்தது. பின்னர் ரெயில் புறப்பட தயாரானபோது சிக்னல் கிடைக்கவில்லை. உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் நீடாமங்கலம்-தஞ்சை இருப்பு பாதையில் சென்று பார்த்தபோது நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து தஞ்சைக்கு செல்லும் பாதையில் 100 மீட்டர் தூரத்தில் ஒரத்தூர் என்ற இடத்தில் தண்டவாள இணைப்பு பகுதியில் நட்டு ஒன்று கழன்று, தண்டவாளத்தின் அடிப்பகுதியில் இருந்த மரக்கட்டை பலமிழந்து இருந்ததும், தெரியவந்தது.

தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட பழுது குறித்து தஞ்சை ரெயில்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. பின்னர் தஞ்சையில் இருந்து தொழில்நுட்ப பிரிவினர் வரவழைக்கப்பட்டு தண்டவாள இணைப்பு நட்டுகளையும், மரக்கட்டைகளையும் சரி செய்தனர்.


இந்த பணி நடந்து கொண்டிருந்தபோது காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு மாலை 5.45 மணிக்கு பதிலாக மாலை 6.10 மணிக்கு வந்தது. தண்டவாளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயிலும், எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நீடாமங்கலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தண்டவாள இணைப்பு பழுது சரி செய்யப்பட்டவுடன், முதலில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின்னர் பயணிகள் ரெயில் மாலை 6.50 மணிக்கு 2 மணிநேரம் தாமதமாக நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில பயணிகள், பஸ்சில் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.

தண்டவாள இணைப்பு நட்டு கழன்று போனது ரெயில்கள் போக்குவரத்தால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இருக்கும் என ரெயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகில் நீடாமங்கலம்-தஞ்சை இருப்புப்பாதை மற்றும் நீடாமங்கலம் காரைக்கால் இருப்பு பாதை பகுதிகளில் கடந்த காலங்களில் மர்மநபர்கள் ஜல்லி கற்களை வைத்ததும், பைப் வெடிகுண்டுபோல் செய்து வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்ததும் அது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார், தமிழக போலீசார், க்யூ பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தண்டவாள இணைப்பில் நட்டு கழன்றது, இயல்பாக நடந்ததா? அல்லது மர்மநபர்களின் சதி வேலையா? என்பது குறித்து ரெயில்வே நிர்வாகத்தினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும். 

Next Story